X

மிக விரைவாக அவசர சிகிச்சையை வழங்க ‘காவேரி கேர்’ செயலியில் ஒன் – டேப் ‘SOS’ அம்சத்தை அறிமுகம் செய்யும் காவேரி மருத்துவமனை

அவசர மருத்துவ சிகிச்சையைப் பெறுவதை எளிமையாக்கவும், துரிதமாக்கவும் வடிவமைக்கப்பட்டிருக்கும், ஒன் – டேப் – ல் இயங்கும் ‘SOS’ அவசர கால வசதியைத் தனது ‘காவேரி கேர்’ செயலியில் அறிமுகப்படுத்துவதை காவேரி மருத்துவமனை இன்று பெருமையுடன் அறிவித்துள்ளது. ஒன் – டேப் என்ற இந்த வசதியான புதிய அம்சத்தின் மூலம், நெருக்கடியான நேரங்களில் பயனர்கள் அவசர நிலை உதவி எண்களை நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை; தங்கள் இருப்பிடத்தை விளக்க வேண்டிய தேவையுமில்லை. இதன் வழியாக உடனடி மருத்துவ உதவியை நோயாளிகள் பெற முடியும்.

அவசர காலங்களில் ஏற்படும் பதற்றம், குழப்பம் அல்லது அறிமுகமில்லாத சூழல் காரணமாக, நோயாளிகளுக்கோ அல்லது அருகில் இருப்பவர்களுக்கோ அவசர ஊர்தி சேவைகளுக்குத் தேவையான விவரங்களைத் தெரிவிப்பது பெரும்பாலும் கடினமாக இருக்கும். காவேரி மருத்துவமனையின் இந்த ‘SOS’ வசதி, பயனரின் இருப்பிடத்தை ஜிபிஎஸ் (GPS) மூலம் தானாகவே கண்டறிந்து, அருகில் உள்ள ஆம்புலன்ஸை உடனடியாக சரியான இருப்பிடத்திற்கு அனுப்பி வைக்கும். அதே நேரத்தில், இந்த ‘SOS’ வசதியானது, பாதிக்கப்பட்டவர் அல்லது அருகில் இருப்பவர், 24 மணி நேரமும் செயல்படும் வீடியோ அழைப்பு வசதி மூலம் காவேரி மருத்துவமனையின் மருத்துவருடன் தொடர்புகொண்டு விளக்கமளிக்க உதவுகிறது. இதன் மூலம் அவசர ஊர்தி நோயாளியின் இருப்பிடத்திற்கு வரும் வரை, நிகழ்நேர மருத்துவ ஆலோசனையை நம்பிக்கை தரும் ஆதரவையும் பெற முடியும்.

ஆம்புலன்ஸ் சேவைகள் மற்றும் மருத்துவருடன் நேரடி கலந்தாலோசனை ஆகியவற்றின் இந்த ஒருங்கிணைப்பு வசதி, நெருக்கடியான அவசர நிலை பாதிப்பு உருவானதற்கும் மருத்துவமனையில் சிகிச்சை கிடைப்பதற்கும் இடைப்பட்ட முக்கியமான இடைவெளியைக் குறைக்க உதவுகிறது.

இந்நிகழ்ச்சியில் பேசிய கிஸ்ஃப்ளோ நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான திரு. சுரேஷ் சம்பந்தம் பேசுகையில், “சிக்கலான பிரச்சனைகளை எளிய தீர்வுகளாக மாற்றுவதே உண்மையான புத்தாக்க செயல்பாடாகும். காவேரி கேர் செயலி அதைத்தான் சிறப்பாக செய்கிறது; உயிர்காக்கும் சிகிச்சையை ஒன் – டேப் அம்சத்தின் மூலம் வழங்குகிறது. தமிழ்நாட்டின் முன்னணி மருத்துவ சேவை நிறுவனமான காவேரி, டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிஜ உலகத் தேவைகளை பூர்த்தி செய்வதையும் மற்றும் உயிர்காக்கும் சிகிச்சையில் மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்துவதைப் பார்ப்பது மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது,” என்று கூறினார்.

குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த காவேரி மருத்துவமனை போன்ற ஒரு சுகாதார நிறுவனம், யதார்த்தமான உலகின் தேவைகளை சரியாகப் புரிந்துகொண்டு, அதற்கு ஒரு தொழில்நுட்ப தீர்வை வழங்கும் முயற்சியில் முன்னிலை வகிப்பது மகிழ்ச்சியும், பெருமிதமும் தருகிறது. துறை சார்ந்த நிபுணத்துவமும் டிஜிட்டல் தொழில்நுட்பமும் ஒன்றிணைந்து பெரிய அளவில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இந்த முயற்சி நல்ல எடுத்துக்காட்டாகும்.”

செயலியில் புதிய அம்சத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய காவேரி மருத்துவக் குழுமத்தின் இணை நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், “போக்குவரத்து முதல் அடிப்படையான பொருட்கள் மற்றும் சேவைகள் வரை அனைத்தும் சில நிமிடங்களில் கிடைப்பதற்கு உதவும் மொபைல் செயலிகள் மக்களின் அன்றாட வாழ்க்கையின் இயல்பான அங்கமாக இன்று மாறிவிட்டன. பல்வேறு துறைகளிலும் வசதியும், வேகமான செயல்பாடும் எதிர்பார்க்கப்படும் நிலையில், சுகாதாரத்துறை மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது. மருத்துவ அவசர நிலை காலங்களில், ஒவ்வொரு வினாடியும் முக்கியமானது. அத்தகைய தருணங்களில் நோயாளி அல்லது உடனிருப்பவர்கள் அதிகம் கவலைப்படுவது இயல்பானதே. பதற்றமான அந்நேரத்தில் அவர்களால் உதவி கோரவோ அல்லது சூழ்நிலையை சரியாகவோ விளக்கிக்கூற இயலாமல் போகலாம்; இது தாமதத்திற்கு வழிவகுத்து விடும். அவசரநிலையின்போது வழங்க வேண்டிய உடனடி சிகிச்சையில் உள்ள சிக்கல்களை நீக்குவதே எங்கள் நோக்கம். காவேரி கேர் ‘SOS’ வசதி மூலம், உதவி என்பது இப்போது ஒன் – டேப் தூரத்தில் தான் இருக்கிறது,” என்று கூறினார்.

அவசர கால ஆதரவைத் தாண்டி, காவேரி கேர் செயலி ஒரு முழுமையான டிஜிட்டல் சுகாதார பராமரிப்பு தளமாகவும் செயல்படுகிறது. பயனர்கள், காவேரி மருத்துவமனை குழுமத்தின் எந்தவொரு கிளையிலும் மருத்துவ சந்திப்புகளுக்கு முன்பதிவு செய்வது, வீடியோ வழியாக அல்லது நேரடியாக ஆலோசனைகளைப் பெறுவது, மருத்துவ அறிக்கைகளை டிஜிட்டல் முறையில் பெறுவது மற்றும் ஒரு குடும்பத்தின் பல உறுப்பினர்களின் மருத்துவப் பதிவுருக்களை ஒரே செயலியில் நிர்வகிப்பது போன்றவற்றை இத்தளத்தில் எளிதாக செய்ய முடியும். இந்தச் செயலி iOS மற்றும் Android தளங்களில் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.

காவேரி கேர் செயலியின் அறிமுகம், மருத்துவச் சேவையை எளிதாக அணுகுவதற்கும், விரைவாகச் செயல்படுவதற்கும், சிகிச்சை பராமரிப்பில் இடைவெளியற்ற தொடர்ச்சிக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் காவேரி மருத்துவமனையின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. அவசர கால உதவிகளை அன்றாடச் சுகாதார சேவைகளுடன் இணைப்பதன் மூலம், எந்த நேரத்திலும், எங்கிருந்த போதிலும் கிடைக்கக்கூடிய, நம்பகமான, அனைத்தும் உள்ளடங்கிய டிஜிட்டல் சுகாதாரத் தீர்வை நோயாளிகளுக்கு வழங்குவதே இச்செயலியின் நோக்கம்.