X

புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

கிறிஸ்தவர்களின் முக்கிய புனித நாட்களில் ஒன்றான புனித வெள்ளியன்று (ஏப்ரல் 3), தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட வேண்டும் எனத் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

உலக மக்களைப் பாவத்திலிருந்து மீட்பதற்காக இயேசு கிறிஸ்து சிலுவையில் உயிர் நீத்த தினத்தைப் புனித வெள்ளியாகக் கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். இந்த நாளில் கிறிஸ்தவ மக்கள் விரதமிருந்து, தேவாலயங்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடுகளில் ஈடுபடுவது வழக்கம்.

இத்தகைய புனிதமான நாளில் மதுக்கடைகள் திறந்திருப்பது, வழிபாட்டுக்குச் செல்லும் கிறிஸ்தவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்தும். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ள சூழலில், மது விற்பனையைத் தாராளமயமாக்கி குற்றங்கள் அதிகரிக்க வழிவகை செய்திருப்பது திமுக அரசின் வேதனையான சாதனையாக உள்ளது.

குறிப்பாகப் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் பாதைகளிலெல்லாம் மதுக்கடைகள் அமைந்திருப்பது வருத்தத்திற்குரியது. எனவே, கிறிஸ்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஏப்ரல் 3-ம் தேதி புனித வெள்ளியன்று தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்கான அறிவிப்பைத் தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். ]

இவ்வாறு ஜி.கே.வாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.