கடந்த திமுக ஆட்சியின் போது நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தவர் எ.வ.வேலு. கடந்த 2022-ம் ஆண்டில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு தொடர்பாக ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்பட 11 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
அத்துடன் அவரை நேரில் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் எ.வே.வேலு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனிடையே அவருக்கு எதிராக காவல்துறை பிறப்பித்த லுக் – அவுட் நோட்டீஸை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் லுக் – அவுட் நோட்டீசுக்கு இடைக்கால தடையை விதித்தது.
மேலும் ஜூலை 15-ம் தேதியன்று லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக எ.வ.வேலுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில், இன்று (ஜூலை 15) காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, முறையாக ஆய்வு செய்யப்படாமல் லுக் – அவுட் நோட்டீஸை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததாக தமிழ்நாடு அரசு சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.
ஆனால், இந்த வாதத்தை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி அமர்வு, எ.வ.வேலு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டிய அவசியம் இல்லை என்றும், அவர் தரப்பில் விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என்று உறுதியளிக்கப்ட்டுள்ளது என்று தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து லுக்- அவுட் நோட்டீஸை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும் என்று தெரிவித்து மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.