X

தவெக எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சென்னை உயர் நீதிமன்றம் தடை!

திருப்பத்தூர் தொகுதியின் தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி, நாளை சட்டமன்றத்தில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

வெறும் 1 வாக்கு வித்தியாசத்தில் (தவெக – 83,375, திமுக – 83,374) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் எல். விக்டோரியா கௌரி மற்றும் என். செந்தில்குமார் அடங்கிய விடுமுறை கால அமர்வு இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஒரே பெயர் குழப்பம்: தமிழகத்தில் சிவகங்கை மற்றும் திருப்பத்தூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் ‘திருப்பத்தூர்’ என்ற பெயரில் இரண்டு தொகுதிகள் உள்ளன. இதனால் தபால்துறை ஊழியரின் தவறால், தனது தொகுதிக்கு வரவேண்டிய ஒரு தபால் வாக்கு மற்றொரு திருப்பத்தூர் தொகுதிக்குத் தவறுதலாகச் சென்றுவிட்டதாகப் பெரியகருப்பன் வாதிட்டார்.

வெற்றியைத் தீர்மானிக்கும் அந்த ஒரு வாக்கு : அந்த ஒரு தபால் வாக்கு முறைப்படி கணக்கிடப்பட்டிருந்தால் தேர்தல் முடிவே மாறியிருக்கக்கூடும் என்பதால், இது ஒரு ‘அரிதான வழக்கு’ எனப் பெரியகருப்பனின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

தேர்தல் ஆணையத்திடம் இது குறித்து விளக்கம் கேட்ட நீதிமன்றம், வழக்கின் தீவிரம் கருதி, அடுத்த உத்தரவு வரும் வரை சீனிவாச சேதுபதி சட்டமன்ற நடவடிக்கைகளிலோ அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பிலோ பங்கேற்கக் கூடாது எனத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.