X

குறுவை சாகுபடிக்காக குறிப்பிட்ட நாளில் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை! – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கமாக உள்ள நிலையில், இன்றைய தினம் அணை திறக்கப்படாதது தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக அஇஅதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காவிரி நீரை மட்டுமே நம்பி இருக்கும் டெல்டா பகுதி விவசாயிகளின் கடன்களைச் சொன்னபடி தள்ளுபடி செய்யாமல் ஏமாற்றி, அவர்களைப் போராட்டக் களத்திற்குத் தள்ளிவிட்டுள்ள தற்போதைய அரசு, இப்போது தண்ணீரைத் திறக்காமல் அதற்கு மாற்றாக 134 கோடி ரூபாய்க்குச் சிறப்புத் தொகுப்புத் திட்டம் என்ற மற்றொரு வெற்று ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகச் சாடியுள்ளார்.

கடந்த அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போதைய அரசு அதனை 18 மணி நேரமாகக் குறைத்து அறிவித்திருப்பதோடு, மாநிலம் முழுவதும் நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பம்பு செட்டுகளைக் கூட இயக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

விவசாயிகளின் வலிகளையும் வேதனைகளையும் உணராமல் அரசு செயல்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையான இதன் தீவிரத்தைப் புரிந்து கொண்டு, மேட்டூர் அணையில் இருந்து உடனடியாகத் தண்ணீரைத் திறந்துவிட்டு அது கடைமடைப் பகுதி வரை தங்கு தடையின்றிச் சென்றடைவதற்கான அனைத்து போர்க்கால நடவடிக்கைகளையும் தமிழக அரசு உடனே மேற்கொள்ள வேண்டும் என்று பலமாக வலியுறுத்தியுள்ளார்.