உடலின் செல்களில் ஏற்படும் அசாதாரண பெருக்கத்தால் உருவாகும் ‘லாங்கர்ஹான்ஸ் செல் ஹிஸ்டியோசைடோசிஸ்’ (LCH) என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்ட 15 மாத ரஷ்யக் குழந்தைக்கு, நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சை தேவைப்படும் நிலை இருந்தது. ஆனால், எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் பல்துறை மருத்துவக் குழுவின் கூட்டு முயற்சியால், மாற்று அறுவைசிகிச்சை இல்லாமலேயே உரிய நேரத்திலான சிறப்பான சிகிச்சைகள் வழியாக தீர்வினை வழங்கி குழந்தைக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
தீவிர நுரையீரல் பாதிப்பு, தொடர்ச்சியான நுரையீரல் சுருக்கம் (நுரையீரலைச் சுற்றியுள்ள பகுதியில் காற்று கசிவதால் ஏற்படும் பாதிப்பு) மற்றும் மூச்சுவிடுவதில் கடுமையான சிரமம் காரணமாக, இருபுறமும் நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்வதற்காகவே இந்தக் குழந்தை ரஷ்யாவில் இருந்து எம்.ஜி.எம் மருத்துவமனைக்குக் அழைத்து வரப்பட்டிருந்தது.
எனினும், மாற்று அறுவைசிகிச்சையை செய்வதற்கு முன்பு, சாத்தியமான அனைத்து மாற்று மருத்துவ வழிமுறைகளையும் ஆராய மருத்துவக் குழு முடிவு செய்தது. அதன்படி, நுரையீரலில் காற்று நிரம்பிய பெரிய இடைவெளியை அகற்றுவதற்கான ‘புல்லக்டமி’ சிகிச்சை மற்றும் நுரையீரலைச் சுற்றியுள்ள அடைபட்ட காற்றை அகற்றி அது மீண்டும் விரிவடையச் செய்யும் சிகிச்சைகள் குழந்தைக்கு அளிக்கப்பட்டன. மேலும், நோயறிதல் மற்றும் சிகிச்சைக்காக முழு நுரையீரலையும் அகற்றாமல், பாதிக்கப்பட்ட நுரையீரல் திசுவின் ஒரு பகுதியை மட்டும் அகற்றும் ‘தொராஸ்கோபிக்’ என்ற நுண்துளை அறுவைசிகிச்சையும் செய்யப்பட்டது. இத்தகைய தீவிர சிகிச்சைகள் மற்றும் தொடர் கண்காணிப்பிற்குப் பிறகு, குழந்தையின் சுவாச நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, தற்போது குழந்தை நலமாக இருக்கிறது. இனி குழந்தைக்கு நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய தேவையில்லை.
இந்த மருத்துவக் குழுவில் இதய அவசர சிகிச்சை, இரத்தவியல் மற்றும் புற்றுநோயியல், குழந்தைகளுக்கான நுரையீரல் அறுவைசிகிச்சை, தொற்றுநோயியல், நரம்பியல், சிறுநீரகவியல், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை (ENT), மார்பக அறுவைசிகிச்சை மற்றும் நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சை நிபுணர்கள், மருத்துவர் உதவியாளர்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) பணியாளர்கள் என பல்துறை வல்லுநர்கள் இடம்பெற்றிருந்தனர். மே மாதம் முதல் செப்டம்பர் 2026 வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைக்கு, வென்டிலேட்டர் ஆதரவு, மேம்பட்ட ஸ்கேன் பரிசோதனைகள், தீவிர கண்காணிப்பு மற்றும் பலகட்ட அறுவைசிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டன.
எம்.ஜி.எம் மருத்துவமனையின் இதய மற்றும் நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சை மையத்தின் இயக்குநர் டாக்டர் K. R. பாலகிருஷ்ணன் மற்றும் இணை இயக்குநர் டாக்டர் சுரேஷ் ராவ் K. G., ஆகியோர் இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்கினர்.
இதுகுறித்து டாக்டர் பாலகிருஷ்ணன் கூறுகையில், “எல்.சி.எச் (LCH) என்பது, பல்வேறு உறுப்புகளில் அசாதாரண செல்கள் மிக அதிகமாக குவியும் ஒரு அரிய நோயாகும். இது நுரையீரலைத் தாக்கும்போது, கடுமையான சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுத்துவதுடன், சில நேரங்களில் நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சை தேவைப்படும் நிலைக்குக் கொண்டுசெல்லும். இருப்பினும், சரியான மருத்துவ ஆதரவுடன் சில குழந்தைகள் இந்த பாதிப்பிலிருந்து மீண்டு வர முடியும். நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சை போன்ற மீள முடியாத தலையீடு என்ற முடிவை எடுப்பதற்கு முன்பு, தொடர்ச்சியான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து, ஆலோசித்து சிகிச்சை முறையை முடிவு செய்வதன் அவசியத்தை இந்த குழந்தைக்கான வெற்றிகர சிகிச்சை உணர்த்துகிறது,” என்றார்.
டாக்டர் சுரேஷ் ராவ் கூறுகையில், “குழந்தையின் நுரையீரல் பாதிப்பு மிகத் தீவிரமாக இருந்ததால், மாற்று அறுவைசிகிச்சை குறித்துத் தீவிரமாகப் பரிசீலித்தோம். ஆனால், நாங்கள் அளித்த மருத்துவச் சிகிச்சைகளுக்குக் குழந்தையின் உடல் நல்ல ஒத்துழைப்பு அளித்ததால், சொந்த நுரையீரலையே மீட்டு, மாற்று அறுவைசிகிச்சையைத் தவிர்க்க முடிந்தது. மாற்று அறுவைசிகிச்சைக்காக ரஷ்யாவிலிருந்து வந்த ஒரு குழந்தைக்கு, அது இல்லாமலேயே சிறந்த பலன் கிடைத்தது எங்களுக்கு பெரிதும் மகிழ்ச்சி அளிக்கிறது. உறுப்புமாற்று அறுவைசிகிச்சையை எப்போது செய்ய வேண்டும், எப்போது தவிர்க்கலாம் என்பதை அறிவதும், அதை செய்வதற்கான நிபுணத்துவத்தை கொண்டிருப்பதை போலவே அவ்வளவு முக்கியம் என்பதை இக்குழந்தைக்கான சிகிச்சை மீண்டும் உறுதிப்படுத்துகிறது,” என்றார்.