இதய சிகிச்சைத் துறையில் இந்தியாவின் முன்னணி மருத்துவமனையாகத் திகழும் எம்ஜிஎம் ஹெல்த்கேர், 80 வயது மதிக்கத்தக்க சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கு LVAD எனப்படும் இயந்திர இதய பம்பை வெற்றிகரமாகப் பொருத்தி மைல்கல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஓய்வுபெற்ற முதியவரான இந்நோயாளி, முற்றிய இதய செயலிழப்பு மட்டுமின்றி, குறைந்த ரத்த அழுத்தம், மோசமடைந்து வரும் சிறுநீரகச் செயல்பாடு மற்றும் நுரையீரலில் நீர் கோர்த்தல் போன்ற பல்வேறு இணை நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தார்.
உடலின் மற்ற பகுதிகளுக்குப் போதுமான ரத்தத்தை பம்ப் செய்ய முடியாத அளவுக்கு நோயாளியின் இதயம் மிகவும் பலவீனமடைந்திருந்தது. இந்த முக்கியப் பணியை இதயத்தின் இடது கீழறை செய்கிறது. இந்நிலை ‘இடது கீழறை செயலிழப்பு’ அல்லது ‘அட்வான்ஸ்டு லெஃப்ட் வென்ட்ரிகுலர் சிஸ்டோலிக் ஹார்ட் ஃபெயிலியர்’ என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக, அவர் அடிக்கடி கடுமையான மூச்சுத்திணறலால் அவதிப்பட்டார். மேலும் பலமுறை தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது. ஒருமுறை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அன்றே மீண்டும் ICU-வில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை கூட அவருக்கு ஏற்பட்டது. தனது மூச்சுத்திணறல் மற்றும் அடிப்படை இதயப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டி, அவர் இந்த மேம்பட்ட சிகிச்சையைத் தேர்ந்தெடுத்தார்.
அவரது முதிர்ந்த வயது, பலவீனமான உடல்நிலை மற்றும் மோசமடைந்து வரும் சிறுநீரகச் செயல்பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மருத்துவக் குழு இதய மாற்று அறுவை சிகிச்சையைத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாக LVAD கருவியைப் பொருத்த முடிவு செய்தது. இந்தக் கருவி இதயத்தின் இடது கீழறையின் உள்ளே பொருத்தப்பட்டு, இரத்தத்தை பம்ப் செய்யும் பெரும்பகுதி பணியை ஏற்றுக்கொள்கிறது.
எம்ஜிஎம் ஹெல்த்கேரில், இதய அறிவியல் துறையின் தலைவரும், இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் இயந்திர சுழற்சி ஆதரவு நிறுவனத்தின் இயக்குநருமான குழுத் தலைவர் டாக்டர் கே.ஆர். பாலகிருஷ்ணன் மற்றும் இணை இயக்குநர் டாக்டர் சுரேஷ் ராவ் கே.ஜி ஆகியோர் இந்த LVAD பொருத்தும் சிகிச்சையை மேற்கொண்டனர். இந்தச் சிகிச்சை வெற்றிகரமாக அமைந்தது, இதைத் தொடர்ந்து நோயாளி மருத்துவமனையில் மூன்று வாரங்கள் தங்கி குணமடைந்த பிறகு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் இப்போது யாரையும் சாராமல் சுயமாக வாழ்கிறார், வழக்கமான நடைப்பயிற்சிக்குச் செல்கிறார், மேலும் சுறுசுறுப்பான மற்றும் உற்சாகமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
இது குறித்து டாக்டர் கே.ஆர். பாலகிருஷ்ணன் கூறுகையில், “நமது இதயம் இருபுறமும் இயங்கும் பம்ப் போல செயல்படுகிறது. வலது பக்கம் நுரையீரலுக்கு ரத்தத்தை அனுப்புகிறது; அதே வேளையில், இடது பக்கம் உடலின் மற்ற பகுதிகளுக்கு ரத்தத்தை பம்ப் செய்கிறது. இந்நோயாளிக்கு, இடது பக்கம் மிகவும் பலவீனமடைந்து தனது பணியைச் செய்ய முடியாத நிலையில் இருந்தது. இதனால்தான் அவருக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது முதிர்ந்த வயது, பலவீனமான உடல்நிலை மற்றும் மோசமாகி வந்த சிறுநீரக செயல்பாடு காரணமாக, வழக்கமான திறந்தநிலை இதய அறுவை சிகிச்சைகளைச் செய்வதற்கு சாத்தியம் இருக்கவில்லை. பல உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கியதால், LVAD பொருத்துவதில் கூட அதிக ஆபத்து இருந்தது. எனவே, இதயச் செயல்பாடு ஆய்வுகள், நுரையீரல் அழுத்த மதிப்பீடு மற்றும் சிறுநீரகம் முதல் மூளை வரையிலான அனைத்து முக்கிய உறுப்புகளின் முழுமையான பரிசோதனைகளை நாங்கள் மேற்கொண்டோம். பொதுவாக LVAD என்பது, முன்கூட்டியே திட்டமிட்டு செய்யப்படும் ஒரு சிகிச்சை என்றாலும், இவரது உறுப்புகள் வேகமாக மோசமடைந்து வந்ததால் காத்திருக்க நேரமிருக்கவில்லை; உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இச்சிகிச்சை சிறப்பாக நடந்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி,” என்றார்.
இது குறித்து டாக்டர் சுரேஷ் ராவ் கூறுகையில், இதயம் தானம் பெறுவதற்காக காத்திருக்கும் மிகவும் கவலைக்கிடமான நோயாளிகளுக்கு ஒரு தற்காலிகத் தீர்வாகவே முதலில் LVAD தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறினார். ஆனால் இன்று, மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாத சில நோயாளிகளுக்கு இது ஒரு நீண்டகால சிகிச்சையாகவும் பயன்படுத்தப்படுகிறது. இம்மருத்துவமனையில் 65 வயதுக்குட்பட்ட பல நோயாளிகளுக்கு LVAD-கள் பொருத்தப்பட்டிருந்தாலும், 80 வயதை நெருங்கும் ஒரு நோயாளிக்கு இச்சிகிச்சை அளிக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.
எம்ஜிஎம் குழுமத்தின் முதுநிலை துணைத்தலைவரும், எம்ஜிஎம் ஹெல்த் கேர் – ன் தலைமை இயக்க அதிகாரியுமான திரு. நிலேஷ் முண்டாடா இது தொடர்பாக கூறியதாவது: “மேம்பட்ட இதய சிகிச்சைக்கான எல்லைகளை விரிவுபடுத்தி புதிய மைல்கற்களை எட்டுவதிலும், நோயாளிகளுக்கு உயிர்காக்கும் புதிய மருத்துவத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சிகிச்சையளிப்பதிலும் எம்ஜிஎம் ஹெல்த்கேர் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இது நேர்த்தியாக பிரதிபலித்திருக்கிறது. முற்றிய இதயச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட, ஏறக்குறைய 80 வயதான ஒரு நோயாளிக்கு வெற்றிகரமாக LVAD கருவியைப் பொருத்தியிருப்பது எங்கள் மருத்துவ நிபுணர்களின் நிபுணத்துவத்தை உறுதிப்படுத்துகிறது. இதயச் செயலிழப்பு என்பது தொடர்ந்து அதிகரித்து வரும் ஒரு சுகாதார சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், சிறப்பான சிகிச்சை முடிவுகளை எட்டவும், நோயாளிகளுக்குப் புதிய நம்பிக்கையையும் சிறந்த வாழ்க்கைத் தரத்தையும் அளிக்கவும் உதவும் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை முறைகளை வழங்குவதில் நாங்கள் தொடர்ந்து உறுதியுடன் செயல்படுவோம்.”