உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒரே நேரத்தில் பக்கவாதம் மற்றும் மாரடைப்புக்கான ஆபத்துடன் அழைத்து வரப்பட்ட 68 வயது மூதாட்டிக்கு சென்னையின் பிரபலமான எம்ஜிஎம் ஹெல்த்கேர், மலர் மருத்துவமனை மருத்துவர்கள், நரம்பியல் மற்றும் இதய சிகிச்சைகளை ஒரே நேரத்தில் வெற்றிகரமான மேம்பட்ட நுண்துளை செயல்முறை மூலம் வழங்கி அவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்பு இருந்த இந்த நோயாளிக்கு, மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் (MCA மற்றும் கரோடிட் தமனி) கடுமையான அடைப்பின் காரணமாக பக்கவாத பாதிப்பு ஏற்பட்டது. மேலும், அவரது இதயத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டத்தையும் கடுமையாக பாதிக்கும் வகையில் கரோனரி தமனியிலும் பெரிய அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
பல்வேறு சிறப்பு துறைகளின் மருத்துவர்கள் அடங்கிய குழு, முதலில் மூளையில் இருந்த அடைப்பைச் சரிசெய்ய மண்டை ஒட்டுக்குள் ஸ்டென்ட் பொருத்தும் சிகிச்சையை மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து கழுத்துப் பகுதியில் இருந்த அடைப்பை அகற்ற ‘கரோடிட் ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சையும் அளிக்கப்பட்டது. அதன் பிறகு, இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை சீராக்க ‘கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சையும் உடனடியாக செய்யப்பட்டது. வியப்பூட்டும் விதத்தில், இந்த மூன்று நுண்துளை சிகிச்சைகளுமே இந்நோயாளிக்கு உடலின் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உணர்விழப்பை ஏற்படுத்தும் மயக்க மருந்து ஊசி மட்டுமே கொடுத்து செய்யப்பட்டன. புரட்சிகரமான இந்த நவீன நுண்துளை செயல்முறைகளின் காரணமாக விரைவாக குணமடைந்த இந்நோயாளி நான்கே நாட்களில் சீரான உடல்நிலையுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
உயிர் காக்கும் இந்த சிக்கலான சிகிச்சைகளை மேற்கொண்ட மருத்துவக் குழுவிற்கு முதுநிலை நரம்பியல் நிபுணர் டாக்டர் கார்த்திகேயன் மற்றும் முதுநிலை இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் மனோகர் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இது குறித்து டாக்டர் கார்த்திகேயன் கூறுகையில், “இது உண்மையிலேயே அதிக சவாலான சிகிச்சையாக இருந்தது. ஏனெனில் நோயாளிக்கு ஒரே நேரத்தில் மூளை மற்றும் இதயம் ஆகிய இரண்டையும் பாதிக்கும் கடுமையான இரத்தநாள அடைப்புகள் இருந்தன. மூளைக்கான ரத்த ஓட்டத்தை விரைவாக சீரமைப்பதே எங்களின் முதல் நோக்கமாக இருந்தது. இன்ட்ராகிரேனியல் ஸ்டென்டிங் என்பது மூளைக்குள் உள்ள மிக மெல்லிய ரத்தக் குழாய்களில் செய்யப்படும் ஒரு சிறப்பு சிகிச்சையாகும். இச்சிகிச்சை ஒரு சில உயர் மருத்துவமனைகளில் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த சிகிச்சை ஒரு சிறிய ஊசித் துவாரம் மூலம் நுண்துளை முறையில் இப்பெண்ணுக்கு செய்யப்பட்டது. இந்த செயல்முறையின் மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால், உயிருக்கு ஆபத்தான இதயப் பிரச்சனைக்கான தீர்வையும் மூளைக்கான சிகிச்சையோடு ஒரே நேரத்தில் வெற்றிகரமாக நாங்கள் செய்தோம். முழு மயக்க மருந்தோ அல்லது பெரிய அறுவை சிகிச்சையோ இல்லாமல், தழும்புகள் ஏதுமின்றி இந்த சிகிச்சைகள் செய்யப்பட்டதால் நோயாளி மிக விரைவாக குணமடைந்தார்,” என்றார்.
தலைமை இயக்க அதிகாரி மற்றும் குழும துணைத் தலைவர் திரு. வேணுகோபால் பட் கூறுகையில், “உயிருக்கு ஆபத்தான இத்தகைய சிக்கலான மருத்துவ அவசர நிலைகளை கையாளுவதில் விரைவான நோயறிதல், மருத்துவர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் சரியான நேரத்தில் அளிக்கப்படும் சிகிச்சை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வெற்றிகரமான இந்த சிகிச்சை செயல்முறை எடுத்துக்காட்டுகிறது. நோயாளியின் உயிரைக் காப்பாற்றியிருக்கும் இந்த வெற்றிகரமான நிகழ்வு, எமது மருத்துவக் குழுவின் நிபுணத்துவம், பல துறை மருத்துவர்களின் ஒருங்கிணைந்த முயற்சி மற்றும் அதிநவீன நரம்பியல் மற்றும் இதய சிகிச்சை வசதிகளின் ஆதரவை பிரதிபலிக்கிறது,” என்று கூறினார்.
எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர் மருத்துவமனையில், முழுமையான பக்கவாத சிகிச்சை பிரிவு 24 மணி நேரமும் செயல்படுகிறது. இங்கு நரம்பியல் நிபுணர்கள், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்தியல் நிபுணர்கள், பயிற்சி பெற்ற பக்கவாத சிகிச்சை நிபுணர்கள், இயன்முறை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய குழு செயல்பட்டு, நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் சிறந்த சிகிச்சையை வழங்கி அவர்கள் நலம் பெறுவதை உறுதி செய்கிறது.