X

பல அரிய வகை நோய்களால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமிக்கு வெற்றிகரமான ‘மிட்ரல் வால்வு’ மாற்று அறுவை சிகிச்சை செய்த எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனை!

தீவிரமான மிட்ரல் வால்வு நோயின் பாதிப்பால் மூச்சுத் திணறலோடு, பெரும்பாலும் படுக்கையிலேயே முடக்கப்பட்டிருந்த ஒரு 14 வயது சிறுமிக்கு, உடலமைப்பு மற்றும் அறுவை சிகிச்சை தொடர்பான பல்வேறு சவால்களை முறியடித்து, எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவர்கள் மிகவும் சிக்கலான மற்றும் அரிய ‘மிட்ரல் வால்வு’ மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர்.

இடது இதயக்கீழறை வெளியேறல் பாதையில் (LVOT) அடைப்புடன் கூடிய தீவிர ‘ஈரிதழ் பின்னொழுக்கு’ பிரச்சனை இந்தச் சிறுமிக்கு இருந்தது. சேதமடைந்த மிட்ரல் வால்வு காரணமாக, உடலின் மற்ற பகுதிகளுக்கு ரத்தம் சீராகச் செல்வதற்குப் பதிலாக, இடது ஏட்ரியத்திற்கு ரத்தம் பின்னோக்கிக் கசிந்தது. இதனால் இதயத்திற்கு அதிக அழுத்தம் ஏற்பட்டு கடுமையான மூச்சுத்திணறலை இச்சிறுமி எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதயத்திலிருந்து ரத்தம் வெளியேறும் பாதை குறுகலாக இருந்ததால் நிலைமை இன்னும் சிக்கலாகி, இதயம் ரத்தத்தை பம்ப் செய்வதை கடினமான செயல்பாடாக மாற்றியிருந்தது.

இந்த அறுவை சிகிச்சையின் மூலம், சேதமடைந்த மிட்ரல் வால்வு மாற்றப்பட்டு, ரத்தக்குழாய் அடைப்பு நீக்கப்பட்டது. இதன் விளைவாக இதயம் வழியாகச் சீரான ரத்தம் ஓட்டம் மீண்டும் சாத்தியமானது.

இந்தச் சிறுமிக்கு இருந்த இரண்டு அரிய வகை நோய்களினால் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ளப் பல மருத்துவமனைகள் மறுத்துவிட்டன. ஏனெனில், அச்சிறுமிக்கு இடதுபுறத்திற்குப் பதிலாக மார்பின் மையப்பகுதியில் இதயம் அமைந்திருந்த ‘மீசோகார்டியா’ எனப்படும் ஒரு பிறவி குறைபாடும் இருந்தது. இந்த அசாதாரண உடல் அமைப்பியல் காரணமாக மிட்ரல் (இதய ஈரிதழ்) வால்வை அணுகி அறுவைசிகிச்சை செய்வது மிகவும் கடினமானதாக இருந்தது.

மேலும், அச்சிறுமிக்கு ‘மோர்கியோ சிண்ட்ரோம்’ என்ற அரிய பரம்பரை வளர்சிதை மாற்றக் கோளாறும் இருந்தது. இதனால் உடலில் சில சிக்கலான சர்க்கரை மூலக்கூறுகள் குவிந்து, கழுத்து முதுகெலும்பின் மேல் பகுதியில் உறுதியற்ற தன்மை உட்படப் பல எலும்பு குறைபாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிப்பு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியிருந்தது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நேரம் முழுவதும் அச்சிறுமியின் கழுத்துப் பகுதியை நிலைநிறுத்தவும் பாதுகாக்கவும் சிறப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்ததால், மயக்க மருந்து வழங்கும்போதும் மற்றும் அறுவை சிகிச்சையின்போதும் மருத்துவக் குழுவினருக்கு இது கூடுதல் சவாலாக அமைந்தது.

குழந்தைகளுக்கான மார்பறை, இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர்.கே.ஆர். நவீன் டேவிட்சன், இந்தச் சிறுமிக்குத் திறந்தநிலை இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவக் குழுவிற்கு தலைமை வகித்தார்.

அறுவை சிகிச்சையின்போது, மிட்ரல் வால்வைச் சென்றடைவதற்காக மேல் பெருஞ்சிரை பகுதி (SVCA), இன்பண்டிபுலர் (பெய்குழல் வடிவான) அடிப்பகுதிச் சுவர் (ICB) மற்றும் இடது இதய ஊற்றறையின் (LA) ஒரு பகுதி உட்பட இதயத்தின் மேல் அறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுவர்கள் துண்டிக்கப்பட்டன. பின்னர் அதற்குப் பதிலாக 25 மி.மீ அளவுள்ள ஒரு மெக்கானிக்கல் வால்வு பொருத்தப்பட்டது. காயங்களை மூடி தையல் போடுவதற்கு முன்பாக இதயக்கீழறை பகுதியிலும் தேவையான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து டாக்டர் ஆர்.கே.ஆர். நவீன் டேவிட்சன் கூறுகையில்: “மோர்கியோ சிண்ட்ரோம் உள்ள ஒருவருக்கு மீசோகார்டியா (மார்பின் மத்தியில் இதயம் அமைந்திருப்பது) இருப்பது மிகவும் அரிதானது. இந்த நோயாளியைப் பொறுத்தவரை, இடது இதயக்கீழறையில் ஏற்பட்ட அடைப்பு காரணமாகக் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இந்த உடல்நலப் பிரச்சனையால் அவர் தனது படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு முழுமையாகப் படுக்கையிலேயே முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இதயத்தின் உட்புறச் சுவரில் படிப்படியாகத் தழும்புகள் உருவாகும் அபாயம் இருந்ததாலும், வேறு நீண்டகாலத் தீர்வு இல்லாததாலும் மிட்ரல் வால்வை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு இச்சிறுமி நன்றாகக் குணமடைந்து வருகிறாள். அவள் முழுமையாகக் குணமடைய இன்னும் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை ஆகலாம்.”

இருதய அறிவியல் பிரிவின் தலைவரும், இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிறுவனத்தின் இயக்குநருமான டாக்டர் கே.ஆர். பாலகிருஷ்ணன் பேசுகையில்: “மோர்கியோ சிண்ட்ரோம் பாதித்த ஒரு குழந்தைக்கு மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்த எங்கள் பல்துறை அறுவை சிகிச்சை மற்றும் மயக்கவியல் மருத்துவக் குழுவினரை நினைத்துப் பெருமைப்படுகிறேன். நோயாளியின் விரைவான குணமடைதல் மீதும், அடுத்த கட்ட சிகிச்சைகளில் இச்சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆதரவளிப்பது மீதும் எங்களின் சிறப்பு கவனம் தொடர்ந்து இருக்கும்.”

அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய கண்காணிப்பு மற்றும் சிகிச்சைகள் குறித்துப் பேசிய, இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிறுவனத்தின் இணை இயக்குநர் டாக்டர் சுரேஷ் ராவ் கே.ஜி.: “மோர்கியோ சிண்ட்ரோம் உள்ள நோயாளிகளுக்கு மயக்க மருந்து வழங்குவதும் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய மேலாண்மையும் மிகவும் சிக்கலானது. மேல் சுவாசக்குழாய் சிதைவு, கழுத்து முதுகெலும்பின் உறுதியற்ற தன்மை மற்றும் இதய-சுவாச செயல்பாட்டுக் குறைபாடு ஆகிய மூன்று முக்கிய சவால்கள் இதற்குக் காரணமாகும். இந்தச் சிறுமிக்கு நுரையீரல் சுருக்கப் பிரச்சனையும் இருந்ததால், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய காலகட்டத்தில் மிக நெருக்கமான கண்காணிப்பு தேவைப்பட்டது.”