துல்லியமான புற்றுநோய் சிகிச்சையில் தங்களது சிறப்பான நிலையை மேலும் வலுப்படுத்தும் விதமாக, எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் மற்றும் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர், அடையார் மருத்துவமனை ஆகியவை ‘CAR-T செல் சிகிச்சை’ (CAR-T Cell Therapy) எனப்படும் செல் அடிப்படையிலான நவீன நோயெதிர்ப்பு சிகிச்சையை நோயாளிகளுக்கு வெற்றிகரமாக வழங்கி அதன் சிறப்பான சிகிச்சை விளைவை நிரூபித்துள்ளன. வழக்கமான சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில், தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இரண்டு முதியவர்களின் உயிர்கள் இச்சிகிச்சையின் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளன.
புற்றுநோய் சிகிச்சையில் ஒரு திருப்புமுனையாக கருதப்படும் இந்த CAR-T செல் சிகிச்சையில், நோயாளியின் சொந்த நோயெதிர்ப்பு செல்களே புற்றுநோய் செல்களைக் கண்டறிந்து அழிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்படுகின்றன. வழக்கமான சிகிச்சைகள் பலனளிக்காத மற்றும் புற்றுநோய் முற்றிய நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை உத்தி புதிய நம்பிக்கையை அளிக்கிறது.
இச்சிகிச்சை உத்தியினால் பயனடைந்தவர்களில் ஒருவரான 70 வயது முதியவர், எட்டு மாதங்களுக்கும் மேலாக ‘லிம்போமா’ எனப்படும் நிணநீர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு இருந்த இதயப் பிரச்சினைகள் காரணமாக முழு அளவிலான கீமோதெரபி சிகிச்சை அளிக்க முடியாத சிக்கல் இருந்தது. முன்பு வழங்கப்பட்ட வழக்கமான சிகிச்சைகள் பலனளிக்காமல் புற்றுநோய் மீண்டும் தாக்கிய நிலையில், அவருக்கு அடையார் எம்ஜிஎம் மலர் மருத்துவமனையில் CAR-T சிகிச்சை வெற்றிகரமாக அளிக்கப்பட்டது.
62 வயதான இரண்டாவது நோயாளி, மிகவும் வேகமாக பரவக்கூடிய, தீவிரமான நிணநீர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். நான்கு மாதங்களுக்கு முன்பு அளிக்கப்பட்ட முதல் கட்ட கீமோதெரபி சிகிச்சை அவருக்கு பலனளிக்கவில்லை. வழக்கமான சிசிச்சையில் பயனில்லாத நிலையில், குணமடைவதற்கான வாய்ப்பு மிக குறைவாகவே அவருக்கு இருந்தது. அவருக்கு எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் -ல் CAR-T சிகிச்சை அளிக்கப்பட்டது பலனளித்திருக்கிறது.
இது குறித்து எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் – ன் மருத்துவ புற்றுநோயியல் பிரிவின் இயக்குநரும் முதுநிலை மருத்துவ நிபுணருமான டாக்டர். எம்.ஏ. ராஜா கூறுகையில், “துல்லிய இலக்கு புற்றுநோயியல் சிகிச்சை ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்றவாறு புதிய சிகிச்சை முறைகளை உருவாக்கி வருகிறது. முற்றிய நிலையில் உள்ள புற்றுநோய்களுக்கு கூட சிகிச்சைக்கான விருப்பத்தேர்வுகள் முடிவடைந்து விட்டன என்று அர்த்தமல்ல. எங்கள் மருத்துவமனைகளில், நோயாளிகளின் பாதுகாப்பு, தனிப்பட்ட கவனிப்பு மற்றும் குறைந்த செலவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு CAR-T திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவக் காப்பீட்டைச் சரியாகப் பயன்படுத்துவதன் மூலமும், தேவையற்ற தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) அனுமதிகளைத் தவிர்ப்பதன் மூலமும், இந்த சிக்கலான சிகிச்சையை நோயாளிகள் எளிதில் பெறக்கூடிய வகையில் குறைந்த செலவில் எங்கள் மருத்துவக் குழு வழங்கியுள்ளது,” என்றார்.
எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் – ன் ரத்த-புற்றுநோயியல் (BMT) நிபுணர் டாக்டர். எம். கோபிநாதன் கூறுகையில், “இந்தத் தொழில்நுட்பம் நோயாளியின் சொந்த நோயெதிர்ப்பு மண்டலத்தை மீண்டும் தூண்டி செயல்பட வைப்பதன் மூலம் செயல்படுகிறது. சிறப்பு செயல்முறை மூலம் நோயாளியின் ரத்தத்தில் இருந்து ‘T செல்கள்’ பிரித்தெடுக்கப்பட்டு, மேம்பட்ட ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகின்றன. அங்கு அவை புற்றுநோய் செல்களைக் கண்டறிந்து தாக்கும் வகையில் மாற்றி அமைக்கப்படுகின்றன. பின்னர் முழுமையான தரப்பரிசோதனைக்கு பிறகு, அந்த செல்கள் மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டு, நோயை எதிர்த்துப் போராடுவதற்காக நோயாளிக்குச் செலுத்தப்படுகின்றன. ரத்தப் புற்றுநோய் சிகிச்சையில் இது ஒரு மிகப்பெரிய முன்னேற்றமாகும்,” என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “நோயாளிக்கு CAR-T செல்களைச் செலுத்துவதற்கு முன், ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்றவாறு பிரத்யேகமாக கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு, நோய் கட்டுப்பாட்டில் இருப்பதை மருத்துவர் உறுதி செய்கிறார். இதற்கு ரத்தத்தில் இருந்து தேவையான செல்களை மட்டும் பிரித்தெடுத்துவிட்டு, மற்றவற்றை பாதுகாப்பாக உடலுக்கே திருப்பியனுப்பும் வசதி கொண்ட ‘அபெரெசிஸ்’ மையம், GMP சான்றிதழ் பெற்ற மேம்பட்ட ஆய்வகம் மற்றும் பிரத்யேக தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியவை தேவை. பரிசோதனையகங்களுக்கு இடையே செல்களை மாற்றும்போது போதுமான வெப்பநிலை பராமரிப்புடன் வலுவான போக்குவரத்து வசதியும் மிகவும் முக்கியமாகும்,” என்றார். பக்க விளைவுகளைக் குறைப்பதற்காக, CAR-T செல் உற்பத்தி மற்றும் விநியோகத்துடன் மேம்பட்ட ஆராய்ச்சிகள் காலப்போக்கில் தொடர்ந்து உருவாகி வருகின்றன, மேலும் எதிர்காலத்தில், தன்னுடல் தாக்கக் கோளாறுகளில் CAR-T செல் பயன்பாட்டிற்கான விரிவாக்கப்பட்ட அணுகுமுறை எட்டும் தொலைவில் உள்ளது.
எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர் அடையார் மருத்துவமனையின் மருத்துவப் புற்றுநோயியல் துறையின் முதுநிலை மருத்துவ நிபுணரும், CAR-T சிகிச்சை திட்டத்தின் இயக்குநருமான டாக்டர். சுமன் கல்யாண் N. கூறுகையில், “ஒவ்வொரு நோயாளியும் வேறுபடுகின்றனர். அதே போல ஒவ்வொரு புற்றுநோய் பாதிப்பும் நபருக்கு நபர் மாறுபடுகிறது. அதனால் தான், துல்லியமான மருத்துவமே புற்றுநோய் சிகிச்சையின் எதிர்காலமாக உள்ளது. CAR-T மற்றும் அதிநவீன மூலக்கூறு சிகிச்சைகள் மூலம், சிக்கலான மற்றும் முற்றிய புற்றுநோய்களுக்கும் கூட இப்போது தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சையை எங்களால் அளிக்க முடியும்,” என்றார்.
துல்லியமான புற்றுநோய் சிகிச்சையில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயிற்சி சான்றிதழ் பெற்ற டாக்டர். சுமன் கல்யாண் N. இந்தியாவின் முதல் முறையான, குறைந்த செலவிலான CAR-T சிகிச்சை வழிமுறைகளை உருவாக்கியுள்ளார். இதில் காப்பீட்டு ஆதரவும் அடங்கும். இதனால் பலரும் இந்த மேம்பட்ட சிகிச்சையைப் பெற முடியும். “இந்த வழிமுறைகள் இந்திய நோயாளிகளுக்கு மட்டுமின்றி, தரமான மற்றும் குறைவான செலவில் புற்றுநோய் சிகிச்சையை நாடி வரும் சர்வதேச நோயாளிகளுக்கும் ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இது சர்வதேச மருத்துவ சுற்றுலாவின் தலைநகரம் என்று புகழ் பெற்றிருக்கும் சென்னையின் அந்தஸ்தை மேலும் வலுப்படுத்துகிறது,” என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் வெற்றியானது, எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனைகளில் உள்ள புற்றுநோயியல், ரத்த மாற்று மருத்துவம், செவிலியர், மருந்தகம் மற்றும் அவசர சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய ஒருங்கிணைந்த மருத்துவக் குழுவின் பலத்தைப் பிரதிபலிக்கிறது.