தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட முதலமைச்சர், கிராமப்புற பொருளாதார மேம்பாட்டில் பால் உற்பத்தி முக்கியப் பங்கு வகிப்பதைக் கருத்தில் கொண்டு, கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் 3,16,000-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.
ஏற்கனவே கூட்டுறவு சங்கம் மூலமாக லிட்டருக்கு ₹1 உயர்த்தப்பட்டு, அரசு ஊக்கத்தொகை ₹3-லிருந்து ₹5 ஆக உயர்த்தப்பட்டு, கொள்முதல் விலை ₹38-லிருந்து ₹41 ஆக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மாட்டுத்தீவணம், தவிடு, புண்ணாக்கு போன்ற இடுபொருட்களின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று லிட்டருக்கு மேலும் ₹3 உயர்த்தப்பட்டு, கொள்முதல் விலை ₹44 ஆக வழங்கிட அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் ஆவின் நிறுவனத்திற்கு ஏற்படும் கூடுதல் செலவினமான மாதத்திற்கு ₹60 கோடியும், ஆண்டிற்கு ₹720 கோடியும் அரசே ஈடு செய்து வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.