X

8,931 நாட்கள் அரசு தலைமை பதவி வகித்த பிரதமர் மோடிக்கு அமைச்சர்கள், தலைவர்கள் பாராட்டு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதமாவதற்கு முன், குஜராத் மாநிலம் முதல்வராக இருந்தார். அதன்பின் 2014 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் ஆனார். தற்போது வரை பிரதமராக இருந்து வருகிறார். இவர் முதல்வர் மற்றும் பிரதமராக நேற்றுடன் 8931 நாட்கள் மக்கள் சேவையாற்றி வருகிறார். இதன் மூலம் இந்திய அரசு வரலாற்றில் தலைமை பதவியில் அதிக நாட்கள் இருந்து மக்கள் சேவை ஆற்றி வரும் தலைவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக சிக்கிம் மாநில முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங், 8930 நாட்கள் மக்கள் சேவையாற்றி சாதனைப் படைத்திருந்தார். இதை தற்போது பிரதமர் மோடி முறியடித்துள்ளார். இதையடுத்து பிரதமர் மோடியின் இத்தகைய சாதனையை பாராட்டி மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி, தற்போது இந்தியாவில் மிக நீண்ட காலம் பதவி வகித்த அரசாங்க தலைவராக திகழ்கிறார். நாட்டின் மீதும், நாட்டு மக்களின் மீதும் பிரதமர் மோடி கொண்ட தூய அர்ப்பணிப்பே இதை வரையறுக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், “ஏழைகளுக்கு அவர்களின் உரிமைகளை வழங்குவதாகட்டும், வளர்ச்சியில் புதிய மைல்கற்களை அமைப்பதாகட்டும் அல்லது உலக அரங்கில் தேசத்தின் பெருமையை உயர்த்துவதாகட்டும் மோடி சகாப்தம் இந்தியாவை அடையாளம் காண முடியாத அளவிற்கு உருமாற்றியுள்ளது.” என்று பாராட்டியுள்ளார்.