திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஸ்தானீகர்களை அச்சுறுத்துவதையும் தேவையின்றித் தொந்தரவு செய்வதையும் அமைச்சர்கள் ரமேஷ் மற்றும் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோர் உடனடியாகக் கைவிட வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
திருப்பரங்குன்ற மலையில் உள்ள தீபத்தூணில் தீபமேற்றும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தவெக அரசு வேண்டுமென்றே மீறியுள்ளது சந்தேகத்திற்டமின்றி நிரூபணமாகியுள்ளதாகக் கூறியுள்ளார். தனது தவறை மறைப்பதற்காக அறங்காவலர்கள் மீது பழியைச் சுமத்துவதோடு, ஸ்தானீகர்களின் பெயர்களையும் தேவையின்றி இவ்விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் அரசு இழுத்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
வரம்பை மீறிச் செயல்பட்ட இந்தத் தவெக அரசு தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் ஸ்தானீகர்களுக்கு அழுத்தம் கொடுத்துக் கடிதங்களைப் பெற்றதாகத் தகவல்கள் வருவது உண்மையெனில் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளார்.
இந்துக்களின் உரிமைகளை முடக்குவதில் காட்டும் வேகத்தில் ஒரு துளியாவது சட்டம் ஒழுங்கில் காட்டியிருந்தால், பெண் ஆட்சியரிடம் முறைதவறி நடந்து கொண்ட தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் இந்நேரம் கைது செய்யப்பட்டிருப்பார் எனச் சாடியுள்ளார்.
இனியாவது அடுத்தவர்களை மிரட்டிப் பலிகடாவாக்கும் செயலை விடுத்து, நிர்வாகத்தில் நடக்கும் தவறுகளைக் களைய முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு முன்வர வேண்டும் என நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.