இந்தியாவில் மொபைல் கட்டணங்கள் மிகவும் குறைவாக இருப்பதாகவும், பயனர்கள் மாதத்திற்கு குறைந்தபட்சம் 350 ரூபாய் வரை கட்டணம் செலுத்த முடியும் என்றும் பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் கருத்து தெரிவித்துள்ளார். பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 50-வது ஆண்டு விழாவை முன்னிட்டு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சில்லறை நுகர்வுப் பொருட்களான சோப்பு, சிப்ஸ் பாக்கெட் அல்லது பெப்சி போத்தல்களின் விலையுடன் ஒப்பிடும்போது, தற்போதைய மொபைல் ரீசார்ஜ் கட்டணம் மிகக் குறைவு என்றும், நுகர்வோர் ஒரு நாளைக்கு வெறும் 10 முதல் 12 ரூபாய் மட்டுமே செலவிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தொகையின் மூலம் பயனர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் (UPI), வங்கிச் சேவைகள், கல்வி, அரசின் நேரடிப் பலன் பரிமாற்றங்கள், சுகாதாரப் பதிவுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் எனப் பல சேவைகளைப் பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள், மின்சாரம், ஊழியர்களின் சம்பளம் மற்றும் நிர்வாகச் செலவுகள் உள்ளிட்ட அனைத்தும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், சீனாவின் ஒரு மில்லியன் கோபுரங்களுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் இருமடங்காக உயர்த்தவும் போதிய முதலீடுகள் அவசியமென அவர் விளக்கமளித்துள்ளார்.
ஏர்டெல் நிறுவனத்தின் சராசரி ஒரு பயனருக்கான மாத வருவாய் (ARPU) தற்போது 271 ரூபாயாக உள்ள நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 350 ரூபாய் இலக்கை எட்டினால் மட்டுமே நிறுவனங்கள் தொடர்ச்சியாக முதலீடுகளைச் செய்ய முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.