நாடு முழுவதும் இன்று (ஜூன் 21, 2026) நீட் இளநிலை (NEET UG 2026) மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. எவ்வித முறைகேடுகளும் இன்றி மிகவும் பாதுகாப்பான, நேர்மையான மற்றும் மாணவர்களுக்கு உகந்த சூழலில் நடத்துவதற்கான அனைத்து விரிவான ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
இந்தியாவில் உள்ள 551 நகரங்களில் உள்ள 5,440 தேர்வு மையங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள 14 மையங்கள் என மொத்தம் அசாத்தியமான அளவில் ஆங்கிலம் மற்றும் 12 இந்திய மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இதற்காக 95,000-க்கும் மேற்பட்ட தேர்வு அறைகளில் மொத்தம் 1,38,560 சிசிடிவி (CCTV) கேமராக்கள் பொருத்தப்பட்டு தேசிய, மாநில மற்றும் அமைச்சக அளவிலான கட்டுப்பாட்டு அறைகள் மூலம் நேரடியாகக் கண்காணிக்கப்படுவதுடன், மின்னணு முறைகேடுகளைத் தடுக்க 51,311 ஜாமர்கள் (Jammers) பொருத்தப்பட்டுள்ளன.
தேர்வுப் பணியில் ஒவ்வொரு அறைக்கும் இரண்டு கண்காணிப்பாளர்கள், மையத்திற்குப் பத்து கூடுதல் அதிகாரிகள், சோதனைக்காக 38,795 பணியாளர்கள் மற்றும் பயோமெட்ரிக் சரிபார்ப்பிற்காக 48,448 பேர் எனப் பெருமளவிலான மனிதவளம் திரட்டப்பட்டுள்ளது. மேலும், ஏஐ (AI) தொழில்நுட்பக் கருவிகள் மூலம் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படுவதுடன், சுமார் 6,700 நேரடிப் பார்வையாளர்களும், 100-க்கும் மேற்பட்ட மெய்நிகர் பார்வையாளர்களும் மத்திய அளவில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
பாதுகாப்புப் பணிக்காகப் போலீஸ், துணை ராணுவப் படைகள் மற்றும் இந்திய விமானப் படை உதவிகள் நாடப்பட்டுள்ளதுடன், சுமார் 1,500 வங்கித் கிளைகளில் உள்ள ரகசியத் தேர்வுப் பொருட்களைப் பாதுகாக்கவும், 700 சேகரிப்பு மையங்களில் இருந்து ஓஎம்ஆர் (OMR) தாள்களைச் சேகரிக்கவும் தபால் துறையுடன் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டுள்ளது. தேர்வு முன்னேற்பாடுகளைச் சரிபார்க்க ஜூன் 20 அன்று நாடு தழுவிய அளவில் ஒரு ‘மாக் ட்ரில்’ (Mock Drill) நடத்தப்பட்டு அனைத்து அமைப்புகளும் சரிபார்க்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் நலனைக் கருதி குடிநீர், ஓஆர்எஸ் (ORS), ஆம்புலன்ஸ் வசதிகள், பெற்றோர்களுக்கான நிழற்குடைகள், தேர்வு அறைகளில் கடிகாரம் மற்றும் இடதுகை பழக்கமுடைய மாணவர்களுக்கான கூடுதல் ரஃப் தாள்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் போலியான “வினாத்தாள் கசிவு” வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், என்டிஏ-வின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் வருங்கால மருத்துவர்களாக உருவெடுக்கவுள்ள 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எவ்வித மன அழுத்தமும் இன்றி, அமைதியான முறையில் இந்தத் தேர்வை எழுத அனைத்துத் தரப்பினரும் தங்களின் முழு ஆதரவை வழங்க வேண்டும் என என்டிஏ அன்போடு வேண்டுகோள் விடுத்துள்ளது.