X

மத்திய அரசு அதிகாரிகளுக்கு புதிய சலுகை அறிவிப்பு!

மத்திய அரசு அதிகாரிகள் அலுவலகப் பயன்பாட்டிற்காக வாங்கும் 1.8 லட்சம் ரூபாய் வரையிலான மடிக்கணினி (Laptop), டேப்லெட் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களே சொந்தமாக வைத்துக்கொள்ள மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பழைய விதிகளைத் திருத்தி வெளியிடப்பட்டுள்ள இந்தப் புதிய வழிகாட்டுதலின்படி, சாதாரண சாதனங்களை வாங்குவதற்கான உச்சவரம்பு 1.50 லட்சம் ரூபாய் மற்றும் வரிகள் எனவும், 40 சதவீதத்திற்கும் அதிகமாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘மேக் இன் இந்தியா’ (Make-in-India) பாகங்களைக் கொண்ட சாதனங்களுக்கு 1.80 லட்சம் ரூபாய் மற்றும் வரிகள் எனவும் விலை வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் பே லெவல் 12 (Pay Level 12) மற்றும் அதற்கு மேல் உள்ள அனைத்து அதிகாரிகளும் இந்தத் திட்டத்தின் கீழ் 100 சதவீதம் பயன்பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். அதேபோல் பே லெவல் 8 முதல் 11 வரையிலான அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகளில் 50 சதவீதத்தினருக்கும், துறைச் செயலாளரின் ஒப்புதலுடன் அதிகபட்சமாக 75 சதவீதத்தினருக்கும் இந்தச் சலுகை வழங்கப்படும். சாதனம் வாங்கிய நாளிலிருந்து முதல் நான்கு ஆண்டுகளுக்கு அது அரசாங்கத்தின் சொத்தாகக் கருதப்படும் நிலையில், அந்தக் காலக்கட்டத்தில் சாதனத்தில் உள்ள அரசுத் தரவுகளின் பாதுகாப்பிற்குச் சம்பந்தப்பட்ட அதிகாரியே முழுப் பொறுப்பாவார். நான்கு ஆண்டுகள் பயன்பாடு முடிந்த பிறகு, அந்தச் சாதனத்தில் உள்ள அனைத்து அரசுத் தகவல்களும் முழுமையாக அழிக்கப்பட்டதைத் துறை உறுதி செய்த பின், அதிகாரிகள் அந்த லேப்டாப் அல்லது கேட்ஜெட்டுகளைத் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இலவசமாகத் தக்கவைத்துக் கொள்ளலாம்.

ஒருவேளை நான்கு ஆண்டுகள் முடிவதற்கு முன்பே அதிகாரி ஓய்வு பெற்றாலோ அல்லது பணியிலிருந்து விலகினாலோ, ஆண்டுக்கு 25 சதவீத தேய்மானம் (Depreciation) கணக்கிடப்பட்டு, மீதமுள்ள புத்தக மதிப்பைச் (Book value) செலுத்தி அந்தச் சாதனத்தைத் தங்களோடு எடுத்துச் செல்லவும் புதிய விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.