அமெரிக்காவின் ஹெச்-1பி (H-1B) விசா நடைமுறையில் பல தசாப்தங்களாகப் பின்பற்றப்பட்டு வந்த அதிர்ஷ்டக் குலுக்கல் முறைக்கு (Random Lottery) முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, 2027-ஆம் நிதியாண்டுக்கான (FY27) விசா ஒதுக்கீட்டில் இருந்து ‘சம்பள அடிப்படையிலான’ புதிய தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2026 பிப்ரவரி 27 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த மாற்றத்தின்படி, விண்ணப்பதாரர்கள் பெறும் சம்பளத்தின் அளவைப் பொறுத்தே அவர்களுக்கு விசா முன்னுரிமை வழங்கப்படும். அதிக ஊதியம் பெறும் லெவல் 4 (Level 4) பணியாளர்களுக்குக் குலுக்கல் பட்டியலில் நான்கு முறை பெயர் சேர்க்கப்பட்டு, விசா கிடைக்கும் வாய்ப்பு நான்கு மடங்கு அதிகரிக்கப்படும்; அதே சமயம் குறைந்த ஊதியம் பெறும் ஆரம்பக்காலப் பணியாளர்களுக்கு ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும்.
அமெரிக்கத் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கவும், உலகின் மிகச்சிறந்த திறமையாளர்களை ஈர்க்கவும் கொண்டுவரப்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றம், இந்திய ஐடி நிறுவனங்களுக்கும், அங்குப் பணிபுரியத் துடிக்கும் இளைஞர்களுக்கும் பெரும் சவாலாகவும் அதே சமயம் அனுபவம் வாய்ந்த நிபுணர்களுக்கு ஒரு பொற்காலமாகவும் அமையப்போகிறது.