ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவுக்கு (Online Gaming Bill) மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த மசோதாவின் கீழ், ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டு, அதை ஊக்குவிப்பவர்களுக்கு கடுமையான அபராதம் மற்றும் தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஆன்லைன் சூதாட்டம் மட்டுமின்றி உண்மையான பணத்தை உள்ளடக்கிய ஆன்லைன் கேமிங் தளங்களை ஒழுங்குபடுத்த அல்லது முற்றிலும் தடை செய்ய இந்த மசோதா வழிவகை செய்யும். அதன்படி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களுக்கு பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்படாது. பணம் வைத்து கேமிங்கை ஊக்குவிக்கும் விளம்பரங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்படும்.
அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், இந்த மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பீகார் மாநில SIR உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகளில் அமளியில் ஈடுபட்ட நிலையில், மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் மாநிலங்களவையிலும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பப்படும். அதனைத் தொடர்ந்து சட்டம் அமலுக்கு வரும்.