மத்திய அரசுத் துறைகளில் அரசு வாகனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும், நிதிச் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் ‘ஒரு அதிகாரிக்கு ஒரு அரசு கார் மட்டுமே’ (One Officer, One Official Car) என்னும் கண்டிப்பான புதிய விதியை மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை அதிரடியாக அமல்படுத்தியுள்ளது.
இதன்படி, உயர் அதிகாரிகள் பிற அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது தன்னாட்சி அமைப்புகளின் கூடுதல் பொறுப்புகளைக் கவனித்து வந்தாலும், அவர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அரசுப் பணி வாகனங்களை ஒதுக்கீடு செய்யக் கூடாது என அனைத்து மத்திய அமைச்சகங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும், அதிகாரப்பூர்வ அரசுப் பயணங்களைத் தவிர மற்ற நேரங்களில் பொதுத்துறை மற்றும் பகுதி அரசு நிறுவனங்களின் வாகனங்களைத் தனியாகத் தங்களது வசம் வைத்துப் பயன்படுத்துவதற்கும் உயர் அதிகாரிகளுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பயன்பாட்டில் இல்லாத வாகனங்களைப் பாதுகாப்பாகப் பராமரிக்கவும், எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவுகளைக் குறைத்து அரசு நிதியைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டுதல்களை அனைத்துத் துறைகளும் உடனடியாகவும் கடுமையாகவும் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.