X

இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு – ஐசிசி வெளியிட்ட அறிக்கை

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவித்ததற்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசின் அறிவுறுத்தலின் பேரில், பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற இருந்த இந்தியா – –பாகிஸ்தான் போட்டியில் பங்கேற்க மாட்டோம் என பாகிஸ்தான் அணி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்தது. இருப்பினும், தொடரில் பாகிஸ்தான் பங்கேற்கும் என்றும் கூறப்பட்டது.

இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “இந்த முடிவு உலக கிரிக்கெட்டின் நேர்மை, போட்டித் தன்மையை பாதிக்கும் என்றும், நீண்டகாலத்தில் விளையாட்டிற்கு தீங்கு விளைவிக்க கூடியதாக இருக்கும். இந்த முடிவு தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் (PCB) இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை,” என்று தெரிவித்துள்ளது.

மேலும், “2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை தொடரில் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டிகளில் மட்டும் பங்கேற்குமாறு பாகிஸ்தான் அரசால் எடுக்கப்பட்ட முடிவை ஐசிசி கவனத்தில் எடுத்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவலை ஐசிசி எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. ஆனால், உலகளாவிய விளையாட்டு நிகழ்வில் அனைத்து தகுதி பெற்ற அணிகளும் அட்டவணைப்படி சமமாக போட்டியிட வேண்டும் என்ற அடிப்படை கொள்கையுடன், இத்தகைய தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பு பொருந்தாததாக உள்ளது.”

“ஐசிசி போட்டிகள் நேர்மை, போட்டித்தன்மை, தொடர்ச்சி மற்றும் நியாயத்தின் அடிப்படையில் அமைந்தவை. தேர்ந்தெடுத்த போட்டிகளில் மட்டும் பங்கேற்பது, இந்த போட்டிகளின் புனிதத்தையும் பாதிக்கிறது. தேசிய கொள்கை விவகாரங்களில் அரசுகளின் பங்கை ஐசிசி மதிக்கிறது. ஆனால், இந்த முடிவு உலக கிரிக்கெட்டுக்கும், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் நலனுக்கும், பாகிஸ்தானில் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் சாதகமானதல்ல.”

“இந்த முடிவு, பாகிஸ்தானின் உள்ளூர் கிரிக்கெட்டுக்கும், உலக கிரிக்கெட் சூழலுக்கும் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, PCB இதனை மீண்டும் பரிசீலிக்கும் என ஐசிசி நம்புகிறது. 2026 டி20 உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்துவது ஐசிசியின் முதன்மை இலக்கு. அதற்காக, PCB உட்பட அனைத்து உறுப்பினர்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். அனைத்து தரப்பினரின் நலனையும் பாதுகாக்கும் வகையில், பரஸ்பர தீர்வை PCB ஆராய வேண்டும்,” என ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்த தொடரில் பாகிஸ்தான், இந்தியா, நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா (USA) ஆகிய அணிகளுடன் ‘A’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவுடன் இணைந்து இலங்கை இந்த தொடரை இணைந்து (co-host) நடத்துகிறது. பாகிஸ்தானின் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடைபெறவுள்ளன.

பாகிஸ்தான், பிப்ரவரி 7ஆம் தேதி தொடரின் முதல் நாளில் நெதர்லாந்துக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாட இருக்கிறது. அதன் பின்னர் பிப்ரவரி 10ஆம் தேதி அமெரிக்காவையும், பிப்ரவரி 18ஆம் தேதி நமீபியாவையும் எதிர்கொள்கிறது.

இந்தியாவுக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்தால், இரண்டு புள்ளிகளை இழக்கும் நிலை உருவாகும். மேலும், ஐசிசி விளையாட்டு விதிகளின்படி, அந்த போட்டி ‘forfeit’ ஆக அறிவிக்கப்பட்டால், பாகிஸ்தானின் நெட் ரன் ரேட்டும் பாதிக்கப்படும்.