X

பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது

பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 482 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 202 ரன்னில் சுருண்டது.

280 முன்னிலையுடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. 57.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 எடுத்திருந்த நிலையில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஒட்டு மொத்தமாக பாகிஸ்தான் 461 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 462 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

462 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் ஆரோன் பிஞ்ச், உஸ்மான் கவாஜா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். பிஞ்ச் 49 ரன்கள் எடுத்த நிலையில் முகமது அப்பாஸ் பந்திலவ் எல்பிடபிள்யூ ஆனார். அப்போது ஆஸ்திரேலியா 87 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் வந்த மிட்செல் மார்ஷ், ஷேன் மார்ஷ் ஆகியோரை அப்பாஸ் அடுத்தடுத்து டக்அவுட்டில் வெளியேற்றினார்.

இதனால் ஆஸ்திரேலியா 87 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது. 4-வது விக்கெட்டுக்கு உஸ்மான் கவாஜா உடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நேற்றைய 4-வது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்திருந்தது. கவாஜா 50 ரன்னுடனும், டிராவிஸ் ஹெட் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. ஆஸ்திரேலியாவின் கைவசம் 7 விக்கெட் இருந்தது. 326 ரன்கள் தேவைப்பட்டது. பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் எளிதாக 7 விக்கெட்டை கைப்பற்றி விடுவார்கள் என்ற எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கவாஜா, டிராவிஸ் ஹெட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். முக்கியமாக ஓவர்களை கடத்துவதில் கவனம் செலுத்தினார்கள். மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் டிராவிஸ் ஹெட் 72 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லபுஸ்சேக்னே 13 ரன்னில் வெளியேறினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

6-வது விக்கெட்டுக்கு உஸ்மான் கவாஜா உடன் கேப்டன் டிம் பெய்ன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நங்கூரம் பாய்ச்சி நின்ற மாதிரி நிலைத்து நின்று விளையாடினார்கள். கவாஜா சிறப்பாக விளையாடி 224 பந்தில் 10 பவுண்டரியுடன் சதம் அடித்தார்.

இருவரும் நிலைத்து நிற்க ரசிகர்களிடையே பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடைசி 15 ஓவர் இருக்கும்வரை இந்த ஜோடி நிலைத்து நின்றது. 126-வது ஓவரை யாசிர் ஷா வீசினார். இந்த ஓவரில் உஸ்மான் கவாஜா 141 ரன்கள் எடுத்த நிலையில் எல்பிடபிள்யூ ஆனார். கவாஜா 302 பந்துகள் சந்தித்தார்.

கவாஜா ஆட்டமிழந்ததும் பாகிஸ்தான் பக்கம் ஆட்டம் சற்று சரிந்தது. இதை மேலும் வலுவூட்டும் வகையில் மிட்செல் ஸ்டார்க் (1), பீட்டர் சிடில் (0) ஆகியோரை அடுத்த ஓவரில் யாசிர் ஷா வெளியேற்றினார். இதனால் 12 ஓவரில் பாகிஸ்தானுக்கு இரண்டு விக்கெட்டுக்கள் தேவைப்பட்டது.

அப்போது கேப்டன் டிம் பெய்ன் உடன் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பந்தை தடுத்தாடுவதில் மிகவும் கவனமாக செயல்பட்டனர். ஒவ்வொரு ஓவராக குறைந்து இறுதியில் கடைசி ஓவரை எட்டியது. கடைசி ஓவரில் பாகிஸ்தானுக்கு இரண்டு விக்கெட்டுக்கள் தேவைப்பட்டது. ரசிகர்கள் அனைவரும் சீட் நுனியில் அமர்ந்தனர். யாசிர் ஷா கடைசி ஓவரை வீசினார்.

முதல் ஐந்து பந்துகளை டிம் பெய்ன் சிறப்பாக எதிர்கொண்டார். கடைசி ஒரு பந்தில் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்த முடியாது என்பதால் அத்துடன் போட்டி முடித்துக்கொள்ளப்பட்டது. இதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி டிரா ஆனது.

டிம் பெய்ன் 194 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தும், நாதன் லயன் 34 பந்தில் 5 ரன்கள் எடுத்தும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் டிராவிற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

Tags: sports news