X

பதஞ்சலி நிறுவனத்தின் நெய் தரப் பரிசோதனையில் தோல்வி – ரூ.1.40 லட்சம் அபராதம் விதித்த உத்தரகாண்ட் நீதிமன்றம்

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி தயாரித்த நெய்யின் மாதிரி, தரப் பரிசோதனையில் தோல்வியடைந்ததையடுத்து, அந்த நிறுவனத்திற்கு உத்தரகாண்ட் மாநில நீதிமன்றம் ரூ. 1.40 லட்சம் அபராதம் விதித்து அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த வழக்கு அக்டோபர் 2020-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. உணவு பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரி திலீப் ஜெயின், வழக்கமான பரிசோதனையின்போது பித்தோராகரில் உள்ள ஒரு கடையில் பதான்ஜலி நெய்யின் மாதிரியைச் சேகரித்தார். முதலில், ருத்ரபூரில் உள்ள அரசு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், நெய்யின் மாதிரி நிர்ணயிக்கப்பட்ட தரத்தை எட்டவில்லை என்றும், கலப்படப் பொருட்கள் இருந்ததாகவும் தெரியவந்தது. ஆரம்ப சோதனை முடிவுகளை பதன்ஜலி எதிர்த்தது. எனவே நெய்யின் மாதிரி பரிசோதனைக்காக காஜியாபாத்தில் உள்ள தேசிய ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தேசிய ஆய்வகமும் நெய் தரமற்றது என்று உறுதிப்படுத்தியது. மேலும், நெய்யில் கலப்படம் இருந்ததும் பரிசோதனையில் அம்பலமானது. இதையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரி பித்தோராகர் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அனைத்து வாதங்களையும், ஆதாரங்களையும் ஆராய்ந்த நீதிமன்றம் நெய்யின் உற்பத்தியாளரான பதஞ்சலி ஆயுர்வேத லிமிடெட்டுக்கு ரூ. 1 லட்சம், விநியோகஸ்தருக்கு ரூ. 25 ஆயிரம், அந்த நெய்யை விற்ற கடைக்காரருக்கு ரூ. 15 ஆயிரம் என மொத்தம் ரூ. 1.40 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால் நுகர்வோர் மத்தியில் பொருளின் தரம் குறித்து கவலை ஏற்பட்டுள்ளது.