பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள மின்டானோ தீவில் இன்று (ஜூன் 8) அதிகாலை 2 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.2 ஆக பதிவாகியுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மின்டானோ தீவில் உள்ள ஜெனரல் சான்டோஸ் நகருக்கு தென் மேற்கே 13 கி.மீ. தொலைவிலும், பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக மின்டானோ தீவில் உள்ள பல வீடுகள், அலுவலங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
இந்தசக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, பலாவ், தைவான், பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளின் கடற்கரைகளில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் சுனாமி ஏற்படக்கூடும் என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் பிலிப்பைன்ஸ் நாட்டின் கடலோரப் பகுதிகளில் 10 அடி உயரம் வரை சுனாமி அலை எழக்கூடும் என்றும், அண்டை நாடுகளில் 3 அடி உயரம் வரை சுனாமி அலை எழக்கூடும் எனவும் பிசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கடலோர பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் பேரிடர் மீட்பு படையினரும், ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் நிலநடுக்க மையத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்னதாக கடந்த 2004 டிசம்பர் 24-ம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மலேசியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட சுனாமி பேரலையில் சிக்கி லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.