தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தியும், அதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் கொள்கைகளை வகுக்க வலியுறுத்தியும் விவசாயிகள் மாநாடு கோவை கொடிசியா வளாகத்தில் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகிறார். இதற்காக அவர் நாளை மதியம் 1.30 மணிக்கு விமானம் மூலம் கோவை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகத்துக்கு செல்கிறார். அங்கு மாநாட்டை தொடங்கி வைத்து பேசுவதுடன், சிறப்பாக செயல்பட்ட விவசாயிகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார். இதைதொடர்ந்து அவர் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுகிறார்.
இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு பிரதமர் மோடி மாலை 3.15 மணிக்கு கொடிசியாவில் இருந்து கார் மூலம் புறப்பட்டு கோவை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். பிரதமர் மோடி கோவை வருகையை முன்னிட்டு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கோவை விமான நிலையத்திலும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த பகுதிகளில் இன்று முதல் நாளை இரவு 7 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.