ராகுல் டிராவிட்டை பின்னுக்கு தள்ளிய டோனி!

14வது ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடந்த போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொண்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது.

அடுத்து 238 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் தவான் மற்றும் ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து அசத்தினார்கள். இதனால் 63 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் பாகிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் ராகுல் டிராவிட்டை (504 போட்டிகள்) பின்னுக்கு தள்ளி இந்தியாவிற்காக டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 என மூன்று விதமான போட்டிகளையும் சேர்த்து அதிகளவிலான போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரர் எனும் பெருமையை டோனி பெற்றுள்ளார்.

கடந்த 2004-ம் ஆண்டு வங்காளதேச அணிக்கு எதிராக கிரிக்கெட்டில் அறிமுகமான தோனி இதுவரை 322 ஒரு நாள் போட்டிகள், 90 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 93 டி20 போட்டிகள் என மொத்தம் 505 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 15 சதங்கள், 102 அரை சதங்கள் உள்பட 16 ஆயிரத்து 268 ரன்களை குவித்துள்ளார்.

மேலும், 505 போட்டிகளில் 331 போட்டிகளுக்கு கேப்டனாக பதவியேற்று டி20 உலகக் கோப்பை, ஒரு நாள் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசியின் மூன்று விதமான கோப்பைகளையும் கைப்பற்றிய ஒரே கேப்டன் எனும் வரலாற்று சாதனையையும் அவர் தன் வசம் வைத்துள்ளார்.

இந்த பட்டியலில் 664 போட்டிகளில் விளையாடி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools