தமிழகத்தில் பல பகுதிகளில் அடுத்த 2 நாட்கள் மூடுபனியுடன் கூடிய குளிர் நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் வானிலை அமைப்பு நகர்ந்து வரும்போது நாளை மறுநாள் முதல் மாநிலத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதனால் இரவுகளில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த 2 நாட்களாக பல இடங்களில் பனி மூட்டமான காலை பொழுதும், இரவில் அதிக குளிரும் நிலவின.
குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 20.3 டிகிரி செல்சியசும், மீனம்பாக்கத்தில் 19.3 செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக பதிவாகி உள்ளது.
வடகிழக்கு பருவமழை திங்கட்கிழமை விலகியதால் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை வரை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இரவில் குளிர் தொடர வாய்ப்பு உள்ளது.
இந்த வார இறுதியில் தமிழகத்தில் மழை பெய்யக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 23-ந்தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.