X

நிவாரணப்பணிகளில் அரசு மேலும் தீவிரம் காட்ட வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்

கஜா புயல் பாதித்த நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறியவும், சேதத்தை பார்வையிட்டு தே.மு.தி.க. சார்பில் உதவிகள் செய்யவும் இன்று காலை தே.மு.தி.க.பொருளாளர் பிரேமலதா அங்கு சென்றார்.

முன்னதாக திருச்சிக்கு விமானத்தில் வந்த அவர் விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கஜா புயலால் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் போன்ற மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். போக்குவரத்து இல்லை. மின்சாரம் 4-வது நாளாக இல்லை. மக்களுக்கு குடிக்க தண்ணீருக்கு கூட வழியில்லை.

பல லட்சக்கணக்கான தென்னை மரங்கள், வாழை மரங்கள் புயலில் சிக்கி அழிந்து விட்டன. மக்கள் தத்தளிக்கிறார்கள். இந்நிலையில் தமிழக அரசு நிவாரணப் பணிகளில் மெத்தனமாக செய்வது சரியல்ல. நிவாரணப்பணிகளில் அரசு மேலும் தீவிரம் காட்ட வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதிகளை உடனடியாக வழங்குவது தான் தீர்வாக அமையும். தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரணத்தை வழங்க வேண்டும். அமைச்சர் ஓ.எஸ். மணியன் சுவரை ஏறி குதித்து தப்பி ஓடவேண்டிய நிலை உள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பயணத்தை ரத்து செய்யவேண்டிய நிலை உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நேரத்தில் நிவாரணம் கிடைக்காததால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் பொது மக்களும் இதுபோன்ற நேரங்களில் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அரசு செயல்பட்டதை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பாராட்டியுள்ளார். ஆனால் புயலுக்கு பிறகான நிவாரண நடவடிக்கையில் அரசு மெத்தனமாக உள்ளது. நாங்கள் இன்று பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று தே.மு.தி.க. சார்பில் உதவிகள் செய்கிறோம். இன்று அனைத்து பகுதிகளையும் பார்வையிட்ட பிறகுதான் புயல் நிவாரணப்பணிகள் குறித்து தேவைகள் குறித்து கருத்து கூற முடியும்.

இவ்வாறு பிரேமலதா கூறினார்.