தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி கிராம மக்கள், தங்களின் நீண்ட கால கோரிக்கையான மொபைல் நெட்வொர்க் வசதியை அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து, வரவிருக்கும் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர்.
பல ஆண்டுகளாகத் தொலைத்தொடர்பு வசதி இன்றி தவித்து வரும் இப்பகுதி மக்கள், அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் போன்ற மருத்துவ உதவிகளைக்கூட அழைக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகக் குமுறுகின்றனர். மொபைல் டவர் இல்லாததால் மாணவர்களின் கல்வி மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிழைப்புத் தேடி பல குடும்பங்கள் கிராமத்தை விட்டே வெளியேறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், “எங்களுக்குச் சிக்னல் இல்லை என்றால், உங்களுக்கு ஓட்டு இல்லை” என்ற முழக்கத்துடன் தேர்தலைப் புறக்கணிக்க முடிவெடுத்துள்ள இவர்களின் போராட்டம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.