சபரிமலை தங்கம் திருட்டு வழக்கை சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக தந்திரி கண்டவரரு ராஜீவரு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டார். தந்திரி கைது தொடர்பான விவகாரத்தில் கொல்லம் ஊழல் தடுப்பு நீதிமன்றம், தந்திரிக்கு எதிராக எந்தவொரு ஆதாரமும் இல்லை என தெரிவித்தது.
இந்த விவகாரத்தை பாஜக தற்போது கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கூறியதாவது:-
முன்னாள் தேவசம் மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தொடர்பில் இருந்து கவனத்தை திசைதிருப்ப தந்திரி கைது செய்யப்பட்டார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. நீதிமன்றமே, தந்திரிக்கு எதிராக எந்தவொரு ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
சுரேந்திரன் அல்லது தற்போது தேவசம் மந்திரியாக இருக்கும் வி.என். வாசவன் ஆகியோருக்கு எதிராக எந்தவொரு விசாரணையும் நடத்தப்படவில்லை. விசாரணையின் குளறுபடி, தலைவர்கள் ஈடுபட்டுள்ளதை நாங்கள் அம்பலப்படுத்துவோம். இந்த விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவரான வி.டி. சதீசன் சட்டசபையில் “தந்திரி கைதுக்கு பின்னால் உள்ள காரணம் மற்றும் சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் இவர் செய்த குற்றம் என்ன? என்பதை சிறப்பு விசாரணைக் குழு விளக்கமளிக்க வேண்டும் என்றார்.