சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அண்மையில் நடைபெற்ற தொடர் ஏடிஎம் (ATM) கொள்ளைச் சம்பவங்கள் குறித்துத் தமிழகக் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், ஹரியானா மாநிலத்தில் ஏடிஎம் இயந்திரங்களை உடைப்பதற்கென்றே கொள்ளையர்களுக்குப் பிரத்யேகப் பள்ளிகள் இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவின் நுஹ், பல்வால் மற்றும் மேவாத் ஆகிய பகுதிகளில் அனுபவம் வாய்ந்த கொள்ளையர்கள், பழைய ஏடிஎம் இயந்திரங்களை விலை கொடுத்து வாங்கியும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தும், புதிய நபர்களுக்கு சிசிடிவி கேமராக்களைச் செயலிழக்கச் செய்வது, பணத்திற்குச் சேதம் ஏற்படாமல் கேஸ்-கட்டிங் முறையில் ஏடிஎம் இயந்திரங்களை வெல்டிங் செய்து உடைப்பது குறித்துப் பயிற்சி அளித்து வந்தது தெரியவந்துள்ளது.
போலிப் பணத் தாள்களை வைத்துப் பயிற்சி அளித்து தேர்வுகளும் நடத்தப்பட்டு, அதில் வெற்றிபெறுபவர்களை 4 முதல் 5 பேர் கொண்ட குழுக்களாகப் பிரித்து நாடு முழுவதும் கொள்ளையடிக்க அனுப்பி வைத்துள்ளனர்; கொள்ளையடிக்கும் பணம் கிராம மக்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுவதால் அங்குச் செல்லும் காவலர்களைத் தடுக்கக் கிராமவாசிகளே முற்படும் நிலையில், தமிழகக் காவல்துறையினர் சாமானியர்களைப் போல மாறுவேடத்தில் நுழைந்து இந்த அதிர்ச்சித் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளனர்.