இதயச் செயலிழப்புக்கு வழிவகுக்கும் வகையில் வளர்ச்சியடைந்த பரம்பரை இறுதிநிலை இதய நோயால் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த 31 வயது இளைஞருக்கு, சென்னை, சிம்ஸ் மருத்துவமனை வெற்றிகரமாக இதய மாற்று அறுவைசிகிச்சை செய்து மறுவாழ்வு அளித்துள்ளது.
மூளைச்சாவடைந்த 23 வயது இளைஞரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட இதயம் குறைந்த காலஅளவான 20 நிமிடங்களில் சிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
புதுச்சேரியைச் சேர்ந்த அந்த இளைஞருக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதலே கடுமையான மூச்சுத்திணறல் இருந்துள்ளது. இருப்பினும், அவரால் நேராகப் படுக்கக்கூட முடியாத நிலையும், அன்றாட வேலைகளைச் செய்ய முடியாத அளவுக்கு மூச்சுத்திணறல் பிரச்சனை தீவிரமடைந்த பிறகே மருத்துவ சிகிச்சைக்கு அவர் அழைத்து வரப்பட்டார்.
அவருக்குச் செய்யப்பட்ட எக்கோ கார்டியோகிராம் (ECHO) பரிசோதனையில், இதயத்தின் இடது கீழறைப் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அது செயலிழந்திருப்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட இதயத்திற்கான எம்.ஆர்.ஐ பரிசோதனைகள், அவருக்கு ‘டைலேட்டட் கார்டியோமையோபதி’ (DCM) என்ற பாதிப்பும், இதய செயலிழப்போடு இருப்பதை உறுதி செய்தன. இந்நோயில், இதய தசைகள் தளர்ந்து விரிவடைந்து பலவீனமடைவதால், உடலுக்குத் தேவையான ரத்தத்தை இதயத்தால் திறம்படச் செலுத்த முடியாமல் போகிறது. காலப்போக்கில் இப்பாதிப்பு நிலையானது, இதய செயலிழப்பு ஏற்படும் அளவிற்கு மோசமானது.
இதயத்தசைநோய் வகைகளில் இந்த ‘டைலேட்டட் கார்டியோமையோபதி’ தான் மிகவும் பொதுவான ஒன்றாகும். இந்நிகழ்வில், இந்த நோய் நோயாளிக்கு மரபணு ரீதியாக அவருடைய தந்தையிடமிருந்து வந்திருக்கிறது. அவரது தந்தையும் தற்போது இந்நோய்க்கான சிகிச்சையைப் பெற்று வருகிறார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில், இந்த இளம் நோயாளிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இருப்பினும், மருத்துவக் குழுவினர் உடனடியாக செயல்பட்டு, இதய சுவாச மீட்பு சிகிச்சையளித்து அவரது உடல்நிலையைச் சீராக்கினர்.
இந்நோயாளிக்கு இதய உறுப்புமாற்று அறுவைசிகிச்சையே சிறந்த ஒரே தீர்வு என்று முடிவு செய்த மருத்துவக் குழுவினர், அவரை உறுப்புமாற்று அறுவைசிகிச்சைக்கான காத்திருப்போர் பட்டியலில் பதிவு செய்தனர். ரத்த வகை பொருத்தம், உடல் எடை, வயது, குறுக்குப் பொருத்த முடிவுகள் மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் பொருத்தம் ஆகியவற்றின் அடிப்படையில் பொருத்தமான இதயத்தை தானமாகப் பெறும் முயற்சியை தொடங்கினர். மாநில அரசின் உறுப்பு மாற்று பகிர்வு வலையமைப்பின் மூலமாக இந்நோயாளிக்கு தானமளிப்பவரிடமிருந்து பெறக்கூடிய பொருத்தமான இதயம் கிடைக்கப்பெற்றது.
உடனடியாக செயல்பட்ட சிம்ஸ் மருத்துவக் குழுவினர் கொடையாளர் இருந்த மருத்துவமனைக்குச் சென்று, அவரது இதயத்தை அங்கிருந்து பெற்று, மிக விரைவாக 20 நிமிடங்களுக்குள் சிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அதே நேரத்தில், மற்றொரு அறுவைசிகிச்சை குழுவினர், சிம்ஸ் மருத்துவமனையில் இந்த இளம் நோயாளியின் பழுதடைந்த இதயத்தை அகற்றும் பணியைத் தொடங்கி, அவரை ‘கார்டியோபல்மோனரி பைபாஸ்’ ஆதரவு நிலையில் வைத்தனர். இந்த சாதன அமைப்பு, அறுவைசிகிச்சையின் போது இதயம் மற்றும் நுரையீரலின் பணிகளைத் தற்காலிகமாக மேற்கொள்கிறது. வெற்றிகரமாக நிறைவடைந்த இந்த இதய மாற்று அறுவைசிகிச்சைக்கு சுமார் நான்கு மணி நேரம் ஆனது.
உறுப்புமாற்று அறுவைசிகிச்சைக்குப் பிறகு, தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) கண்காணிப்பின் கீழ் ஏழு நாட்கள் வைக்கப்பட்டிருந்தார்.
ICAD மையத்தின் இயக்குநரும், முதன்மை இதய அறுவைசிகிச்சை பிரிவின் தலைவருமான டாக்டர் பாஷி தலைமையிலான மருத்துவக் குழுவில், இதய மாற்று அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜீவ் திலக் செல்லசாமி, இதய அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் முகமது இப்ராஹிம், இதய செயலிழப்புக்கான சிகிச்சை நிபுணர் டாக்டர் ஷில்பா மேனன், இதய மயக்கவியல் பிரிவின் தலைவர் டாக்டர் அஜு ஜேக்கப், இதய மயக்கவியல் நிபுணர்கள் டாக்டர் அருண்குமார் மற்றும் டாக்டர் கிஷோர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த வெற்றிகர சிகிச்சை குறித்து டாக்டர் பாஷி கூறியதாவது: “இறுதி நிலை இதய செயலிழப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு மற்ற அனைத்து சிகிச்சை முறைகளும் பலனளிக்காத போது, இதய மாற்று அறுவைசிகிச்சை மட்டுமே புதிய நம்பிக்கையளிக்கும் தீர்வாகும். ஒரு வெற்றிகரமான இதய மாற்று அறுவைசிகிச்சைக்கு பல்வேறு துறைகளைச் சார்ந்த மருத்துவ நிபுணர்களின் குழுவினரின் ஒருங்கிணைந்த கூட்டு செயல்பாடு மிக அவசியம். ஒரு நிமிடம்கூட வீணடிக்கப்படாமல் தானமாகப் பெற்ற உறுப்பை மிக விரைவாக சாலை வழியாக மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு உறுப்புமாற்று சிகிச்சை குழு மற்றும் உறுப்பு தானம் அளித்த நபர் இருந்த மருத்துவமனை ஆகிய இரண்டும் ஒருங்கிணைந்த அர்ப்பணிப்புமிக்க நடவடிக்கைகள் பெரிதும் உதவின. அறுவைசிகிச்சை நிபுணர்கள், இதய நோய் வல்லுநர்கள், மயக்கவியல் நிபுணர்கள், உறுப்புமாற்று அறுவைசிகிச்சை ஒருங்கிணைப்பாளர்கள், செவிலியர்கள் மற்றும் தீவிர சிகிச்சைக் குழுவினர் என அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படும் போதே, உறுப்பு தானம் பெறும் நோயாளிக்கு ஒரு புதிய வாழ்க்கை வெற்றிகரமாக மலர்கிறது,” என்றார்.
டாக்டர் ராஜீவ் திலக் பேசுகையில், “நோயாளி மருத்துவமனையில் இருந்தபோதே மாரடைப்பால் பாதிக்கப்பட்டதால், இந்த மாற்று அறுவை சிகிச்சையின் ஒவ்வொரு கட்டத்தையும் நாங்கள் மிகவும் கவனமாகத் திட்டமிட்டோம். தானமாகப் பெறப்பட்ட இதயத்தைக் கொண்டு வருவதிலிருந்து, உறுப்புமாற்று அறுவைசிகிச்சையை செய்து முடிப்பது வரை அனைத்துமே மிகத் துல்லியமாகவும் கவனமாகவும் மேற்கொள்ளப்பட்டது. அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய முதல் ஆறு மாதங்களில் பொருத்தப்பட்ட புதிய உறுப்பை உடல் நிராகரிக்கும் அபாயம் அதிகம் என்பதால், நோயாளி அடுத்த ஆறு மாதங்களுக்குத் தொடர் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டியது அவசியம்,” என்று விளக்கினார்.
இது தொடர்பாக டாக்டர் சில்பா மேனன் கூறியதாவது: “முற்றிய இதயச் செயலிழப்பிற்கான மேலாண்மை என்பது, உறுப்புமாற்று அறுவைசிகிச்சை என்பதையும் கடந்தது. ஒவ்வொரு நோயாளிக்கும், எந்தச் சிகிச்சை பொருத்தமாக இருக்கும் என்பதைக் கண்டறிய விரிவான பரிசோதனை செய்யப்படுகிறது. உகந்த மருத்துவ சிகிச்சை, கருவி அடிப்படையிலான சிகிச்சை, இயந்திர சுழற்சி ஆதரவு அல்லது இதய மாற்று அறுவைசிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கியதாக இது இருக்கலாம். சாத்தியமுள்ள மிகச் சிறந்த சிகிச்சை முடிவுகளை நோயாளி பெறுவதை உறுதி செய்ய பல்துறை நிபுணர்களின் ஒத்துழைப்பும், கூட்டு அணுகுமுறையும் அவசியமாகும்.”
எஸ்.ஆர்.எம் குழுமத்தின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து கூறுகையில், “இந்த வெற்றிகரமான இதய மாற்று அறுவை சிகிச்சை, சிறப்பு இதயப் பராமரிப்பை மேம்படுத்துவதற்கும், நோயாளிகளுக்கு சிக்கலான, உயிர்காக்கும் சிகிச்சைகளை அணுகுவதற்கு வழிவகை செய்வதற்கும் நாங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. எங்களின் இதய நோய் நிபுணர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளர்கள், செவிலியர்கள் மற்றும் ஆதரவுக் குழுவினரின் அர்ப்பணிப்பாலேயே இந்தச் சாதனை சாத்தியமானது. சிம்ஸ் மருத்துவமனையில், மேம்பட்ட மருத்துவத் திறன்களையும் மருத்துவ நிபுணத்துவத்தையும் வலுப்படுத்துவதில் நாங்கள் தொடர்ந்து உறுதியாக உள்ளோம். இதன் மூலம் நோயாளிகள் தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே சிக்கலான சிகிச்சைகளைப் பெற வழிவகை செய்கிறோம்.”
விழிப்புணர்வின் முக்கியத்துவம்: குறிப்பாக இளவயது நபர்களுக்கு ஏற்படும் இதயச் செயலிழப்பு, அவர்களின் வாழ்க்கைத் தரத்தைக் கடுமையாகப் பாதிப்பதோடு, அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நிலையை உருவாக்குகிறது. இது அவர்களின் பணிபுரியும் திறன், அன்றாடச் செயல்பாடுகள் மற்றும் சுறுசுறுப்பான, சுதந்திரமான வாழ்க்கையை வெகுவாக முடக்கி விடுகிறது. ஆரம்பக்கட்டத்திலேயே நோய் அறிகுறிகளை கண்டறிதல், சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெறுதல், வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் முறையான தொடர் மருத்துவ ஆலோசனைகள் ஆகியவை, இதயச் செயலிழப்பு அறிகுறிகளைக் கட்டுப்படுத்தவும், நோய் வளர்ந்து தீவிரமடைவதைத் தடுக்கவும் செய்கிறது.