X

செல்பி எடுத்த வாலிபரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட சிவகுமார் விளக்கம்!

மதுரையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்பதற்காக சென்ற நடிகர் சிவகுமார், செல்பி எடுத்தவரின் செல்போனை தட்டிவிட்ட சம்பவம், சமூக வலைதளங்களில் அதிகமாக பரவியது. இதற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்தன. எனவே அந்த சம்பவத்துக்கு விளக்கம் அளிக்கும் வகையில், நடிகர் சிவகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

செல்பி எடுப்பது என்பது அவரவர் சொந்த வி‌ஷயம். பொது இடங்களில் அதுவும் 200, 300 பேர் கலந்து கொள்ளும் விழாவில் காரில் இறங்குவதிலிருந்து மண்டபத்திற்கு செல்வதற்குள், பாதுகாப்பிற்கு வரும் ஆட்களைக்கூட ஓரம் தள்ளிவிட்டு 20, 25 பேர் செல்பி எடுத்து நடக்கக்கூட முடியாமல் செய்வது நியாயமா? தங்களை புகைப்படம் எடுக்கிறேன் என்று கேட்கமாட்டீர்களா? வி.ஐ.பி. என்றால், தான் சொல்லும்படிதான் இருக்க வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்?

ஆயிரக்கணக்கான மக்களுடன் புகைப்படம் எடுத்துள்ளேன். நான் புத்தன் என்று என்னைச் சொல்லவில்லை. உங்களைப் போல் நானும் ஒரு மனிதன் தான். எனக்கு பிடித்த வாழ்க்கையை நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். என்னைத் தலைவனாக ஏற்றுக்கொண்டு பின்பற்றுங்கள் என்று கூறவில்லை. அடுத்தவர்களை எந்த அளவுக்கு துன்புறுத்துகிறோம் என்று நினைத்துப் பாருங்கள்.

இவ்வாறு நடிகர் சிவகுமார் கூறியுள்ளார்.