வரும் 2027 மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி இலக்கை எட்ட மிகப்பெரிய நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அரசுத் தேர்வுகள் இயக்குநரின் உத்தரவின்பேரில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தொடங்குவது போல தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முதன்மை கல்வி அலுவலர்கள் (CEO) தலைமையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் வணிகவியல் உள்ளிட்ட ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில், தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ள பாடங்களில் மாணவர்களை எப்படி எளிதில் தேர்ச்சி பெறச் செய்வது என்பது குறித்த முக்கிய டிப்ஸ்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளன. குறிப்பாக, பின்தங்கிய மாணவர்களை முன்கூட்டியே கண்டறிந்து அவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள், மாதிரித் தேர்வுகள் மற்றும் பிரத்யேக வினா வங்கிகளை வழங்குவதன் மூலம் அவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால், மாணவர்களை எதைக் கேட்டாலும் தட்டிக் கேட்க முடியாத அளவுக்கு அனைத்துத் தடைகளையும் விதித்துவிட்டு, மறுபுறம் 100 சதவீத தேர்ச்சி வேண்டும் என்று கல்வித்துறை அழுத்தம் கொடுப்பது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி பலமாக எழுகிறது. மாணவர்களின் போக்கை உரிய முறையில் கண்டறிந்து நல்வழிப்படுத்த வேண்டிய ஆசிரியர்களின் அதிகாரத்தைப் பறித்துவிட்டு, வெறும் கண்துடைப்புப் பயிற்சிகளால் மட்டும் கல்வியில் உண்மையான முன்னேற்றத்தை அடைய முடியாது என்ற நிதர்சனத்தைக் காலமே உணர்த்தும்.