X

எம்ஜிஎம் ஹெல்த்கேர் – ல் முதுகுத் தண்டுவட தூண்டல் சிகிச்சை – விபத்தில் பாதிக்கப்பட்டவரின் கை அசைவுத் திறனை மீண்டும் வழங்கி சாதனை

எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை, முதல் முறையாக முதுகுத்தண்டு வடத் தூண்டல் மின்முனைப் பொருத்துதல் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஒரு மேம்பட்ட சிகிச்சை உத்தியான இதில், முதுகுத்தண்டு வடத்திற்கு அருகில் சிறிய மின்முனைகள் பொருத்தப்பட்டு, நரம்புச் செயல்பாட்டை ஒழுங்கமைக்கவும், அசைவுத்திறன் மற்றும் செயல் இயக்கத் திறனை மீண்டும் பெறவும், கட்டுப்படுத்தப்பட்ட மின் தூண்டல்கள் வழங்கப்படுகின்றன.

ஓராண்டுக்கு முன் நடந்த சாலை விபத்தில் முதுகுத்தண்டு வடத்தில் கடுமையான காயம் ஏற்பட்டதால், இரு கால்களின் இயக்கத்திறனை இந்நோயாளி இழந்திருந்தார். முழங்கைகளுக்குக் கீழே கைகளின் அசைவுத்திறனும் கடுமையாக குறைந்திருந்த 30 வயது ஆட்டோ ஓட்டுநருக்கு இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சிகிச்சைக்குப் பின், நோயாளிக்கு கை தசைகளின் பலத்தில் படிப்படியான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது, 6 மாதங்களில், அவர் தனது கை நரம்பு இயக்கச் சக்தியில் MAR 1 தரத்திலான சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளார்.

நரம்பியல் செயல்பாடு மேம்பட மேம்பட, இந்த முதுகுத்தண்டு வடத் தூண்டல் மின்முனைகளுக்கு அடிக்கடி புரோகிராமிங் செய்ய தேவைப்படும். வழக்கமான தொடர் பரிசோதனைகளும் மறுவாழ்வு சிகிச்சையும், கைகளின் செயல்பாட்டுத்திறனை அதிகப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், தொடர் கண்காணிப்பில் வைக்கப்படும் இவரது உடல்நிலை, அடுத்த ஓராண்டுக்குள் சிறப்பாக மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோயாளி அனுமதிக்கப்பட்டபோது, விபத்தினால் முதுகுத் தண்டுவடத்திற்கு ஏற்பட்ட சேதத்தின் அளவை மதிப்பிட மருத்துவர்கள் கழுத்துப் பகுதியில் முதுகுத் தண்டுவடத்தின் மீது எம்.ஆர்.ஐ ஸ்கேன் மற்றும் பிற மருத்துவ பரிசோதனைகளை செய்ததில், அவருக்கு ASIA தரம் B முதுகுத்தண்டு வடக் காயம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது காயமடைந்த பகுதிக்குக் கீழே உணர்வுத் திறன் பாதுகாக்கப்பட்டிருந்தாலும், இயல்பான இயக்கத்திறன் பெருமளவு இல்லாத கடுமையான காயத்தை சுட்டிக்காட்டியது.

நோயறிதல் முடிவைத் தொடர்ந்து, நரம்பியல் மீட்சியை ஆதரிக்க, முதுகுத் தண்டுவடத் தூண்டல் சிகிச்சையை செய்ய மருத்துவர்கள் குழு முடிவு செய்தது. கழுத்துப் பகுதியில் முதுகுத் தண்டுவடத்தின் C5 நிலையில், முதுகுத் தண்டுவடத்தின் பாதுகாப்பான வெளி உறையான டூராவுக்கு (Dura) மேலே மின்முனைகள் கவனமாகப் பொருத்தப்பட்டு, 16-தொடர்பு முதுகுத்தண்டு வடத் தூண்டல் மின்முனை அமைப்பு பொருத்தப்பட்டது.

பாதிக்கப்பட்ட இயக்கத்திறன் செயல்பாட்டுடன் தொடர்புடைய முதுகுத் தண்டுவடப் பகுதியை இலக்காகக் கொண்டு இந்த இட அமைப்பு திட்டமிடப்பட்டது. இந்த மின்முனைகள் முதுகுத் தண்டுவடத்தின் செயல்பாட்டை ஒழுங்குப்படுத்த கட்டுப்படுத்தப்பட்ட மின் தூண்டல்களை வழங்குகின்றன. மேலும், நோயாளியின் மருத்துவப் பரிசோதனை மற்றும் முன்னேற்றத்தின் அடிப்படையில் மின்தூண்டல் அமைப்புகள் அவ்வப்போது சரிசெய்யப்படுகின்றன.

நரம்பியல் அறுவைசிகிச்சை துறை இயக்குநர் டாக்டர் ரூபேஷ் குமார் மற்றும் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் அஜின்யா ரேவாட்கர் ஆகியோர் அடங்கிய நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர்கள் குழு, மின்முனை பொருத்துதல் மற்றும் முதுகுத் தண்டுவடத் தூண்டல் சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த நரம்பியல் அறுவைசிகிச்சை துறை இயக்குநர் டாக்டர் ரூபேஷ் குமார் கூறுகையில், “பலவீனம், கடுமையான வலி அல்லது தசைப்பிடிப்பு ஆகிய கடும் சிரமங்களுடன், முதுகுத் தண்டுவடக் காயத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழக்கமான சிகிச்சைகள் மற்றும் மறுவாழ்வு மூலம் இயக்கத்திறன் மீட்சி குறைவாகவோ அல்லது தாமதமாகவோ இருக்கும் பட்சத்தில், முதுகுத் தண்டுவடத் தூண்டல் சிகிச்சையானது புதிய நம்பிக்கையைக் கொடுக்கிறது. இந்த நோயாளியைப் பொறுத்தவரை, செய்யப்பட்ட இச்சிகிச்சை ஏற்கனவே கை அசைவுகளில் அளவிடக்கூடிய முன்னேற்றம் தந்துள்ளது மிகவும் ஊக்கமளிக்கிறது. சிகிச்சைக்கு முன் விரிவான மதிப்பீட்டை நடத்தி, சிகிச்சைக்குப் பின் தேவையான மறுவாழ்வு சிகிச்சைக்காக அவரைத் தயார்படுத்தினோம். தூண்டல் என்பது தனியாகச் செய்யப்படும் சிகிச்சையல்ல; இது முறையான பிசியோதெரபி மற்றும் மறுவாழ்வு சிகிச்சையுடன் இணைந்து செயல்படும்போது சிறந்த பலனைத் தரும்.

மருத்துவ முன்னேற்றத்தின் அடிப்படையில் மின்முனைகளுக்கு அவ்வப்போது புரோகிராமிங் செய்வதன் மூலம், வரும் மாதங்களில் அவரது நரம்பியல் மீட்சியை அதிகப்படுத்த முடியும் என நம்புகிறோம். கடுமையான பாதிப்புக்குள்ளான செயல்பாடுகளை மீண்டும் பெற விரும்பும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்தத் தொழில்நுட்பம், குணமளிக்கும் ஒரு வரமாக அமையும்,” என்றார்.