உலக மருத்துவ வரலாற்றில் மிகவும் அரிதான ஒரு சாதனையாக, எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையின் மருத்துவர்கள் 32 வார கர்ப்பிணிப் பெண்ணுக்கு அதிக ஆபத்து நிறைந்த இரண்டு அவசரகால அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளனர். கடுமையான தண்டுவடப் பிரச்சனையால் அப்பெண்ணால் நடக்க இயலாததோடு, மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் கட்டுப்பாட்டையும் இழந்திருந்தார். மருத்துவக் குழுவினர் முதலில் அவசரகால சிசேரியன் மூலம் குழந்தையைப் பாதுகாப்பாக வெளியே எடுத்தனர். அதைத் தொடர்ந்து, நரம்பு அழுத்தத்தைச் சரிசெய்யவும் நிரந்தர பக்கவாதம் ஏற்படுவதைத் தடுக்கவும் சிக்கலான தண்டுவட அறுவை சிகிச்சையை உடனடியாக மேற்கொண்டனர். தற்போது தாய்க்கு நடக்கும் திறன் மீண்டும் கிடைத்துள்ளது; பிறந்த பச்சிளம் குழந்தையும் நலமுடன் பாதுகாப்பாக உள்ளது.
L4-L5 தண்டுவடப் பகுதியில் ஏற்பட்ட சவ்வு விலகலால் உருவான இந்த பாதிப்பு ‘கௌடா ஈக்வினா சிண்ட்ரோம்’ எனப்படும் மிகவும் அரிதான, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய நரம்பியல் அவசரநிலையாகும். தண்டுவடத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள நரம்புகளே சிறுநீர், மலம் கழித்தல் மற்றும் கால் அசைவுகளைக் கட்டுப்படுத்துகின்றன. விலகிய சவ்வு இந்த நரம்புகளை அழுத்தியதால், கால்களில் பலவீனம் ஏற்பட்டு அவரால் நடக்க முடியாமல் போனதுடன், சிறுநீர் மற்றும் மலம் கழிக்கும் கட்டுப்பாட்டையும் இழந்திருந்தார்.
இந்த அறுவை சிகிச்சையானது எஸ்.ஆர்.எம் குளோபல் மருத்துவமனையின் முதுகெலும்பு சிகிச்சை பிரிவு மூத்த ஆலோசகர் டாக்டர் யோகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதற்கு, அதே மருத்துவமனையைச் சேர்ந்த மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ மூத்த ஆலோசகர் டாக்டர் ஆர்.கே. வித்யாலட்சுமி, மருத்துவ ரத்தவியல் (Clinical Haematology) ஆலோசகர் டாக்டர் டி. அபினயா, பச்சிளங்குழந்தைகள் மருத்துவ (Neonatology) மூத்த ஆலோசகர் டாக்டர் அசோக் சி மற்றும் மயக்கவியல் ஆலோசகர் டாக்டர் ஷண்மிதா ஆர் ஆகியோர் உறுதுணையாக செயல்பட்டனர்.
இது சில மணிநேரங்களுக்குள் சிகிச்சை அளிக்க வேண்டிய மிக அவசரமான ஒரு மருத்துவ நிலையாகும். உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால், நரம்புகள் நிரந்தரமாகப் பாதிக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் நடக்க முடியாத நிலையும், மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதில் கட்டுப்பாடற்ற நிலையும் ஏற்பட்டிருக்கும்.
சுமார் 130 கிலோ உடல் எடை, அவருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு பிரச்சனைகள் ஆகியவற்றோடு, ரத்தம் உறைவதைத் தடுக்கும் ‘ஏபிஎல்ஏ சிண்ட்ரோம்’ என்ற பாதிப்பும் நோயாளிக்கு இருந்தது, இச்சிகிச்சையை மேலும் சிக்கலானதாக ஆக்கியிருந்தன. ரத்தத்தை மெலிய வைக்கும் மருந்துகள் எடுத்துக் கொண்டதால் சிகிச்சையின் போது அதிக ரத்தக்கசிவு ஏற்படும் அபாயமும் இருந்தது,
இந்த சவால்களுக்கு மத்தியிலும், மகப்பேறு மருத்துவர்கள், தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், ரத்தவியல் நிபுணர்கள் மற்றும் குழந்தைகள் தீவிர சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் மிகவும் கவனமாகத் திட்டமிட்டு, பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிகிச்சையை மேற்கொண்டனர். பல துறை நிபுணர்களின் இந்த ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியால் தாயும் சேயும் காப்பாற்றப்பட்டுள்ளனர். நடக்க முடியாமல் தவித்த தாய் இப்போது மீண்டும் நடக்கத் தொடங்கியுள்ளார்; பச்சிளம் குழந்தையும் தீவிர சிகிச்சைப் பிரிவின் (NICU) சிறப்புப் பராமரிப்பில் சீராக உள்ளது.
முதுகெலும்பு அறுவைசிகிச்சையை செய்த முதுநிலை நிபுணர் டாக்டர் யோகேஷ் குமார் கூறியதாவது, “இது மிகவும் அரிதான மற்றும் சிக்கலான ஒரு பாதிப்பு. 32 வார கர்ப்பம், உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு, ஏபிஎல்ஏ சிண்ட்ரோம் மற்றும் கௌடா ஈக்வினா சிண்ட்ரோம் என பல பாதிப்புகள் இப்பெண்ணுக்கு இருந்தன. சிசேரியன் செய்யும்போது நோயாளி மல்லாந்து படுக்க வேண்டும்; ஆனால் தண்டுவட அறுவைசிகிச்சைக்கு குப்புறப் படுக்க வேண்டும் என்பதால் அறுவைசிகிச்சை முறையே பெரும் சவாலாக இருந்தது. பிரசவம் முடிந்தவுடன் நோயாளியைத் திருப்புவது மிகவும் நுட்பமான மற்றும் ஆபத்தான செயலாகும். மேலும், நோயாளி ரத்தத்தை மெலிய வைக்கும் மருந்துகளை உட்கொண்டிருந்ததால் அதிக ரத்தக்கசிவு ஏற்படும் அபாயமும் இருந்தது. இரண்டு அறுவைசிகிச்சைகளையும் ஒரே நேரத்தில் செய்யும்போது மயக்க மருந்து அளிப்பதும், தீவிர கண்காணிப்பும் அவசியமானது. இத்தகைய பல சவால்களையும் தாண்டி, பல்வேறு துறைகளின் நேர்த்தியான ஒருங்கிணைப்பு வெற்றிகர விளைவைத் தந்திருக்கிறது”.
எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பி. சத்தியநாராயணன் கூறுகையில், “இந்த சாதனை ஒரு சிறந்த குழு முயற்சிக்கு உண்மையான எடுத்துக்காட்டாகும். மகப்பேறு மருத்துவர் கர்ப்பகாலப் பராமரிப்பை முன்னின்று நடத்தி, சிசேரியன் செய்வதற்கான முக்கியமான முடிவை எடுத்தார். தண்டுவட அறுவைசிகிச்சை நிபுணர் நரம்புகளில் இருந்த அழுத்தத்தைப் போக்க அவசரகால அறுவைசிகிச்சையை மேற்கொள்ள ரத்தம் உறைதல் சிக்கலை இரத்தவியல் நிபுணரும், மிகவும் சவாலான நிலையில் மயக்க மருந்தளிப்பை மயக்க மருந்தியல் நிபுணரும், பாதுகாப்பாக கையாண்டனர். குழந்தைகள் தீவிர சிகிச்சை நிபுணர் பச்சிளம் குழந்தையை NICU-வில் பத்திரமாகப் பராமரித்தார். இந்த அனைத்து நிபுணர்களுக்கும் இடையிலான சிறப்பான ஒருங்கிணைப்பே இந்த இரு மருத்துவ செயல்முறைகளையும் ஒரே நேரத்தில் வெற்றிகரமாக மேற்கொள்வதைச் சாத்தியமாக்கி சிறந்த பலனை வழங்கியுள்ளது” என்றார்.