X

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா – இரு நாட்டு பக்தர்கள் பங்கேற்பு

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 2 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். தமிழக மற்றும் இலங்கையைச் சேர்ந்த பக்தர்கள் இணைந்து இந்த விழாவை நடத்துகின்றனர். இதன்படி, இந்தாண்டு விழா நேற்று தொடங்கியது.

இதற்காக ராமேசுவரத்தில் இருந்து 90 விசைப்படகுகள் மற்றும் 26 நாட்டுப்படகுகளில் மொத்தம் 3500 பேர் கச்சத்தீவு திருவிழாவிற்கு புறப்பட்டுச் சென்றனர். இவர்களை ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி சங்கர நாராயணன், உதவி போலீஸ் சூப்பிரண்டு மீரா ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

மத்திய, மாநில உளவு பிரிவு போலீசார், சுங்கத் துறையினரின் சோதனைக்குப் பிறகு பக்தர்கள் படகில் செல்ல அனுமதித்தனர். அவர்கள் நேற்று மதியம் கச்சத்தீவை சென்றடைந்தனர். இலங்கை சார்பில் இந்த விழாவிற்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு அந்தோணியார் ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் இலங்கையின் நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன் அந்தோணியார் உருவம் பொறித்த கொடியை ஏற்றினார். தொடர்ந்து ராமேசுவரம் வேர்க்கோடு ஆலய பங்குத் தந்தை தாமஸ் பரிபாலன் தலைமையில் முதல் நாள் திருவிழா நடைபெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற சிலுவை பாதை நிகழ்ச்சியில் இரு நாட்டு பக்தர்களும் சிலுவையை சுமந்து ஆலயத்தை வலம் வந்தனர். சிறப்பு ஆராதனைக்கு பிறகு கிறிஸ்தவ பக்தர்களுக்கு நன்மை வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு தேர்பவனி நடைபெற்றது. இதில் நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன், யாழ் மாவட்ட குரு முதல்வர் ஜெபரத்னம் உள்ளிட்ட பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருவிழாவின் 2-ம் நாளான இன்று காலை சிறப்பு திருப்பலி, கூட்டு பிராத்தனை யாழ்ப்பாணம் மறைமாவட்ட பிஷப் தலைமையில் நடந்தது. முதலில் தமிழிலும், பின்னர் சிங்களத்திலும் திருப்பலி நடைபெற்றது. இதில் இரு நாட்டு பக்தர்களும் உற்சாகமாக கலந்து கொண்டனர். கூட்டுத்திருப்பலியைத் தொடர்ந்து கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது. தொடர்ந்து தமிழகத்தில் இருந்து வந்த பக்தர்கள் இலங்கை கடற்படையின் சோதனைக்கு பிறகு விசைப்படகுகள் மற்றும் நாட்டு படகுகள் மூலம் தமிழக பக்தர்கள் தாயகம் திரும்பினர்.

கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்ற தமிழக பக்தர்களை நடுக்கடலில், இந்திய கடலோர காவல் படையினர் சோதனை நடத்தினர். ஆண்டுக்கொரு முறை நடைபெறும் திருவிழா என்பதால் இரு நாட்டு பக்தர்களும் உற்சாகமாக கலந்து கொண்டனர். மேலும், இரவு நேரங்களில் இரு நாட்டு பக்தர்களும் தங்களது மகிழ்ச்சி மற்றும் சோகத்தை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டனர். இதனால் அங்கு ஒருவித நெகிழ்ச்சியான சூழல் நிலவியது.