சென்னை எழும்பூர் வர வேண்டிய சில முக்கிய ரயில்களின் சேவையில், பராமரிப்பு பணி காரணமாக திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
பராமரிப்புப் பணிகள் காரணமாகச் சென்னை எழும்பூர் வர வேண்டிய சில முக்கிய ரயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, திருநெல்வேலி – சென்னை எழும்பூர் இடையிலான நெல்லை எக்ஸ்பிரஸ் (12632) இன்று (ஏப்ரல் 06) முதல் ஏப்ரல் 21-ஆம் தேதி வரை தாம்பரம் ரயில் நிலையத்துடன் தனது பயணத்தை நிறைவு செய்யும், அதாவது எழும்பூர் வரை வராது.
அதேபோல், ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16752) இன்று முதல் மறுஅறிவிப்பு வரும் வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். மறுபுறம், தாம்பரத்தில் இருந்து ஹைதராபாத் செல்ல வேண்டிய சார்மினார் விரைவு ரயில் (12759), இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரத்திற்குப் பதிலாகச் சென்னை கடற்கரை (Beach) ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திடீர் மாற்றங்களால் பயணிகள் தங்கள் பயணத் திட்டத்தைச் சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.