X

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 – தனித்து போட்டியிடும் புதிய தமிழகம்

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அறிவிப்பு வெளியிட்ட கிருஷ்ணசாமி, 60 முதல் 70 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வரும் மார்ச் 29 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஒன்றுபட்டு நின்று நம்மை புறக்கணித்தவர்களை நாம் புறக்கணிப்போம், என்று தெரிவித்துள்ள கிருஷ்ணசாமி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிக இடங்களில் போட்டியிட உள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி, 2024 பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டியிட்டது. தற்போது அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த கிருஷ்ணசாமி, தற்போது தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.