தமிழக சிறைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கைதி தப்பிய விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைத் தலைவர் சங்கர் பிறப்பித்த அவசர உத்தரவின் பேரில் மதுரை, சேலம் மற்றும் கடலூர் மத்திய சிறைகளின் கண்காணிப்பாளர்கள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த உத்தரவின்படி மதுரை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் சேலம் மத்திய சிறைக்கும், கடலூர் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் பரசுராமன் மதுரை மத்திய சிறைக்கும், சேலம் மத்திய சிறையின் கூடுதல் கண்காணிப்பாளர் வினோத் கடலூர் மத்திய சிறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்; பொறுப்புகளை ஒப்படைப்பது குறித்து டிஜிபி வெளியிட்டுள்ள சிறப்பு வழிகாட்டுதலின்படி, கிருஷ்ணராஜ் தனது பொறுப்பை மதுரை சரக டிஐஜி முருகேசனிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அவரிடமிருந்து பரசுராமன் மதுரை சிறையின் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல வினோத் தனது பொறுப்பை கிருஷ்ணராஜிடமும், பரசுராமன் தனது பொறுப்பை வினோத்திடமும் ஒப்படைத்துவிட்டு அனைவரும் புதிய பணியிடங்களில் உடனடியாகச் சேர உத்தரவிடப்பட்டுள்ளது; கைதி தப்பிய சம்பவத்தைத் தொடர்ந்து சிறைத்துறை பாதுகாப்பை பலப்படுத்தவும் நிர்வாகத்தைச் சீரமைக்கவும் இந்த நள்ளிரவு இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், உத்தரவு நகலைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதலை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அனுப்ப வேண்டும் எனவும் சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.