X

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பணி செய்வதற்கு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்ற முடியும்.

தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட். பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இந்தத் தேர்வினை எழுதி தகுதியை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டு நவம்பர் மாதம் நடந்து முடிந்தது. இத்தேர் வினை 4 லட்சத்து 24 ஆயிரம் பேர் எழுதினார்கள். இதற்கான தற்காலிக உத்தேச விடை குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தற்காலிக விடை குறிப்பிற்கு தேர்வர்கள் இணைய வழியில் தங்களது ஆட்சேபனை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

பாட வாரியாக வல்லுனர் குழு அமைக்கப்பட்டு முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வுக்குப் பின் பாட வல்லுனர் குழுவால் இறுதி செய்யப்பட்ட விடை குறிப்புகளின் அடிப்படையில் தேர்வு எழுதிய தேர்வர்களின் ஓ.எம்.ஆர். விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டன.

சமீபத்தில் தகுதி தேர்வுக்கான மதிப்பெண் விகிதம் குறைக்கப்பட்டன. 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை தேர்ச்சி பெறக்கூடிய மதிப்பெண் குறைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது. இறுதி விடை குறிப்புகள் மற்றும் தேர்வர்களின் மதிப்பெண் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தகுதி பெற்ற தேர்வர்களுக்கு வருகிற 2-ந்தேதி பிற்பகல் முதல் அவர்களது தகுதி சான்றிதழ் ஆசிரியர் தேர்வு வாரிய www.trb.tn.gov.in ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு இருப்பதால் இந்த முறை தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு உள்ளது.