X

2026-2027 மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது – வைகோ

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2026-2027 மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு மற்றும் மக்கள் நல திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அந்த எதிர்பார்ப்பு முற்றிலும் பொய்த்து உள்ளது.

கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 50 டாலர்களாக குறைந்தபோதிலும், பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படாதது பொதுமக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. மக்களின் மீதான சுமையை குறைக்க மத்திய அரசு எந்த முனைப்பும் காட்டவில்லை. 11 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ள நிலையில், 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும் என்பது நடைமுறைக்கு சார்ந்தது அல்ல. அதுவும்தவிர இது நாட்டின் எதிர்கால பொருளாதார நிலைக்கு நல்ல அறிகுறி அல்ல.

கோவை, ஈரோடு ஆகிய பகுதிகளில் உள்ள நூற்பாலைகள் மற்றும் ஜவுளித் துறைக்காக எந்தவித சிறப்பு திட்டங்களும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படவில்லை. அதேபோல மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது வருத்தம் அளிப்பதாக உள்ளது. இருப்பினும் சுங்கவரியை குறைத்து உள்ளது மட்டும் வரவேற்கத்தக்க நடவடிக்கை.

ஆட்சியில் அதிகாரப் பங்கு கோரிக்கை வைப்பது ம.தி.மு.க.வின் நோக்கம் அல்ல. வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெறும். திராவிட மாடல் ஆட்சி தொடரும். முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்பார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசிய அளவில் நல்ல பெயர் இல்லை. இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்பது குறித்த பேச்சுகளை முன்கூட்டியே பேச முடியாது. கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்தபிறகே சீட் பங்கீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நான் பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.