X

அமெரிக்காவில் பலிப்புயலால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்வு

அமெரிக்காவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி அங்கு பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. அட்லாண்டிக் பெருங்கடல் அருகே பனிப்புயல் ஒன்று உருவானது. மேற்கு மற்றும் மத்திய மேற்கு மாகாணங்களில் தாக்கி வரும் இந்தப் புயலுக்கு பெர்ன் என பெயர் வைத்து அந்நாட்டின் வானிலை ஆராய்ச்சி மையம் கண்காணித்து வருகிறது.

கடந்த சில நாட்களாக அமெரிக்காவின் கிழக்கு டெக்சாஸ் தொடங்கி வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, ஹட்சன் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக வானிலை மையம் நியூ மெக்சிகோ தொடங்கி நியூ இங்கிலாந்து வரையில் உள்ள 14 கோடி மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறுவதற்கு தடை விதித்துள்ளது.

பனிப்புயலின் கோர தாண்டவம் காரணமாக தெற்கு கரோலினா, விர்ஜீனியா, ஜியோர்ஜியா, வடக்கு கரோலினா, மாரிலாந்து, கென்டகி உள்ளிட்ட 12 மாகாணங்களுக்கு அவசர நிலை பிரகடனம் அறிவித்து அந்நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார்.

அர்கன்சாஸ் முதல் நியூ இங்கிலாந்து வரை புயல் பரவியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் உறைபனி குளிர், மின்தடை மற்றும் போக்குவரத்து முடக்கம் உள்ளிட்டவற்றால் அவதிப்பட்டு வருகின்றனர். பிட்ஸ்பர்க்கிற்கு வடக்கே உள்ள பகுதிகளில் 20 அங்குலம் வரை பனி பெய்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா முழுவதும் தாக்கிய சக்திவாய்ந்த பனிப்புயலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 30 பேர் பலியாகினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் 8 பேர் உயிரிழந்தனர். மாசசூசெட்ஸ், ஓஹியோவில் தலா 2 பேர் இறந்தனர். இந்த பனிப்பொழிவு காரணமாக அந்நாட்டில் சுமார் 9 லட்சம் வீடுகளுக்கு மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கின. பனிப்புயல் காரணமாக வெளிநாடுகள் மற்றும் உள்ளூர்களுக்கு இயக்கப்படவிருந்த 11500 விமானங்கள் ரத்தாகின. நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.