2026 பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று செய்திகளைச் சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர்களுக்கான அனுமதி மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், தேர்தல் நடைமுறைகளைச் செய்தி சேகரிக்க வாக்குச்சாவடிகளுக்குள் நுழையும் செய்தியாளர்கள், 1961-ஆம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகளின்படி அந்தந்த வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களின் முறைப்படுத்துதலுக்குக் கண்டிப்பாகக் கட்டுப்பட வேண்டும்; அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் பிஐபி (PIB) அல்லது மாநில செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை (DIPR) மூலமாக விண்ணப்பித்து உரிய அதிகாரப் பூர்வ அனுமதி கடிதங்களைப் பெற்றிருக்க வேண்டும். தேர்தல் ரகசியத்தைக் காக்கும் பொருட்டு, வாக்குப்பதிவு நடைபெறும் ரகசிய இடத்திற்குள் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கக் கடும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், போலி நபர்களைத் தவிர்க்கப் பலகட்ட சரிபார்ப்புகளுக்குப் பிறகே அனுமதி கடிதங்கள் வழங்கப்படும் என்றும் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் ‘அத்தியாவசிய சேவைகள்’ பிரிவின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளதால், அவர்கள் தபால் வாக்கு (Postal Ballot) வசதியைப் பயன்படுத்திக் கொள்ளவும் தகுதியுடையவர்கள் என இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.