மருத்துவ சேவை விரைவாகத் தேவைப்படும் நெருக்கடியான அவசர காலங்களில் நோயாளிகளுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப் பயிற்சி பெற்ற மருத்துவக் குழுவினரையும், அத்தியாவசிய உயிர் காக்கும் உபகரணங்களையும் விரைவாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில், சென்னை முழுவதும் இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்களை உள்ளடக்கிய ‘காவேரி ஃபர்ஸ்ட் ரெஸ்பாண்டர்ஸ்’ சேவையை காவேரி மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது. மருத்துவப் பயிற்சி பெற்றவர்களால் இயக்கப்படும் இந்த வாகனங்கள், அவசர காலங்களில் சம்பவ இடத்திற்கு உடனடியாகச் சென்று நோயாளிகளைப் பரிசோதிக்கவும், உரிய நெறிமுறைகளின்படி தகுந்த முதலுதவி சிகிச்சையை அளிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், நோயாளிகளை விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும், தேவையான மேலதிக சிகிச்சையை வழங்கவும், வழக்கமான ஆம்புலன்ஸ் சேவைகளுடனும், மருத்துவமனையுடனும் இவை ஒருங்கிணைந்து செயல்படும்.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல்துறை (போக்குவரத்து – தெற்கு) இணை ஆணையர் திரு. பி. பகலவன், இ.கா.ப., தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இத்திட்டத்தின் முதல் கட்டத்தில் காவேரி மருத்துவமனை குழுமத்தின் சென்னை வலையமைப்பில் உள்ள ஆழ்வார்பேட்டை, வடபழனி, ரேடியல் சாலை மற்றும் மா காவேரி ஆகிய கிளைகளை உள்ளடக்கிய 10 இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அல்லது குறுகிய சாலைகள் காரணமாக பெரிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் வருவதில் தாமதம் ஏற்படலாம் என்ற சூழலைக் கருத்தில் கொண்டு, உடனடியாக மருத்துவ உதவிகளை வழங்குவதற்காகவே இந்த இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் கட்டமைப்பு பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கானவை அல்ல. மாறாக, நோயாளிகளுக்குத் தேவையான மேல்சிகிச்சை மற்றும் அவர்களை மருத்துவமனைக்கு விரைவாக அழைத்துச்செல்லும் ஆம்புலன்ஸ் வரும் வரை, அவர்களுக்கு அத்தியவசிய முதலுதவிகளை வழங்கி உயிரைக் காப்பாற்றுவதற்கான அடிப்படை நடவடிக்கைகளை எடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
ஒவ்வொரு ‘ஃபர்ஸ்ட் ரெஸ்பாண்டர்’ வாகனத்திலும் ஆட்டோமேட்டட் எக்ஸ்டர்னல் டிஃபிப்ரில்லேட்டர் (AED), ஆக்சிஜன் வசதி மற்றும் அவசரகால மருத்துவ உபகரணத் தொகுப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
உதாரணமாக, மாரடைப்பு ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நோயாளிகளுக்கு, AED கருவி மூலம் அவர்களின் இதயத் துடிப்பை ஆராய்ந்து, தேவைப்படும் பட்சத்தில் உடனடியாக மின் அதிர்வு சிகிச்சையை அளிக்க முடியும். மருத்துவரீதியாக அவசியப்படும்போது நோயாளிகளுக்கு உடனடியாக ஆக்சிஜன் செலுத்தும் வசதியும் இதில் இருக்கிறது. மேலும், இந்த பைக்கில் இடம்பெற்றுள்ள அவசரகால மருத்துவ உபகரணத் தொகுப்பு, நோயாளியை உடனடியாகப் பரிசோதிக்கவும், மருத்துவ நெறிமுறைகளின்படி தகுந்த முதலுதவி சிகிச்சை அளிக்கவும் மருத்துவப் பணியாளருக்கு உதவுகிறது.
‘ஃபர்ஸ்ட் ரெஸ்பாண்டர்ஸ்’ என அழைக்கப்படும் இந்த மருத்துவப் பணியாளர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட அவசரகால சிகிச்சை கட்டமைப்பின் ஒரு பகுதியாகவே செயல்படுகின்றனர். 5ஜி தொழில்நுட்ப இணைப்பு, வெப்கேமராக்கள் மற்றும் ஜிபிஎஸ்/லைவ் டிராக்கிங் வசதிகளுடன் இருப்பதால், சம்பவ இடத்திலிருந்தபடியே மருத்துவமனை குழுவுடன் அப்பணியாளர்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடியும். நோயாளி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துவரும்போது, நிகழ்நேர ஒருங்கிணைப்பைச் சாத்தியப்படுத்தவும், தொடர் சிகிச்சையை எவ்விதத் தாமதமுமின்றி வழங்கவும் இது பெரிதும் உதவும். அவசர சிகிச்சைக்கு 044-40006000 என்ற எண்ணில் மருத்துவமனையை தொடர்பு கொள்ளலாம்.
இந்த அறிமுக விழாவில் காவேரி மருத்துவமனை குழுமத்தின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் மணிவண்ணன் செல்வராஜ் பேசுகையில், “மருத்துவ அவசரநிலை உருவாகும் காலத்தில், நோயாளியை விரைவாக சென்றடைவதுதான் முதல் சவால். சென்னை போன்ற நகரங்களில் உள்ள போக்குவரத்து நெரிசல் இந்தச் சவாலை மேலும் கடினமாக்குகிறது. இந்த எதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, எங்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறதோ, அங்கு அதை உடனடியாகக் கொண்டு சேர்க்கும் ஒரு கட்டமைப்பை உருவாக்க நாங்கள் விரும்பினோம். ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக் குழுவினர் அடுத்த கட்ட சிகிச்சையை ஒருங்கிணைக்கும் அதே நேரத்தில், சம்பவ இடத்திலேயே தகுந்த சிகிச்சை தொடங்குவதை உறுதி செய்யும் விதமாகப் பயிற்சி பெற்ற மருத்துவ மீட்பாளர்களையும் அத்தியாவசிய உபகரணங்களையும் சாலைகளில் களமிறக்கவே ‘காவேரி ஃபர்ஸ்ட் ரெஸ்பாண்டர்ஸ்’ திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஆம்புலன்ஸ் சேவைக்கு மாற்று அல்ல; ஆம்புலன்ஸுக்காகக் காத்திருக்கும் நேரத்தில், முதலுதவி பெறுவதற்காகவும் நோயாளிகள் காத்திருக்கக் கூடாது என்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்,” என்று கூறினார்.
காவேரி மருத்துவமனை குழுமத்தின் இணை நிறுவனரும் செயல் இயக்குநருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில், “அவசரநிலை சிகிச்சை என்பது ஒரு நோயாளியை நாம் எவ்வளவு விரைவாகச் சென்றடைகிறோம் என்பதைப் பொறுத்தது மட்டுமல்ல; பாதிப்பு ஏற்பட்ட அந்த முதல் சில நிமிடங்களில் என்ன நடக்கிறது என்பதையும் பொறுத்தது. பயிற்சி பெற்ற பணியாளர்கள், சரியான உபகரணங்கள் மற்றும் இணைக்கப்பட்ட மருத்துவக் கட்டமைப்பு ஆகியவை இருக்கும்போதுதான் விரைவான மீட்பு நடவடிக்கை பயனளிப்பதாக இருக்கும். இந்த திட்டத்தின் மூலம், அவசரநிலை சிகிச்சை செயல்முறையை மருத்துவமனைக்கு வெளியேயும் விரிவுபடுத்தி, முதல் கட்ட மருத்துவ உதவியை பொதுமக்களுக்கு இன்னும் நெருக்கமாக நாங்கள் கொண்டு சேர்க்கிறோம். விரைவான இயக்கம், அவசரநிலைக்கான தயார்நிலை மற்றும் நிகழ்நேர தொடர்பு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு, அந்த ஆரம்ப நிமிடங்களை உயிரைக் காப்பாற்றுவதற்கு மிகவும் பயனுள்ளதாக மாற்றுவதுடன், நோயாளி தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதையும் உறுதி செய்யும்,” என்று தெரிவித்தார்.
காவேரி மருத்துவமனை ஏற்கனவே சென்னையில் ஒருங்கிணைந்த அவசரகால ஆம்புலன்ஸ் நெட்வொர்க்கை இயக்கி வருகிறது. இதில் உள்ள 5ஜி வசதி கொண்ட ஆம்புலன்ஸ்கள், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியிலேயே நோயாளிகளின் உடல்நிலையை நிகழ்நேரத்தில் கண்காணிக்கவும், தொலைதூர மருத்துவ வழிகாட்டுதல்களைப் பெறவும் உதவுகின்றன. இந்த விரிவான அவசரகாலச் சிகிச்சை கட்டமைப்பில் ‘ஃபர்ஸ்ட் ரெஸ்பாண்டர்ஸ்’ சேவை மற்றொரு அங்கமாக இணைந்து, அவசர நிலை ஏற்படும் சம்பவ இடத்திற்கே உடனடியாகச் சென்று உயிர் காக்கும் மருத்துவ உதவி வழங்குவதைச் சாத்தியமாக்கும்.