வயநாடு நிலச்சரிவில் சிக்கி வீடு, உடமைகளை இழந்த 555 பேரின் வங்கி கடன் தொகை 18,75,69,037.90 ரூபாயை கேரள அரசே ஏற்றுள்ளது. கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு மறுத்த நிலையில், முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்தத் தொகை வங்கிகளுக்கு செலுத்தப்பட உள்ளன. அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன் இந்த செய்தியை உறுதி செய்துள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
“நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பிறகு, பாதிக்கப்பட்ட மக்கள் வாங்கிய கடன்கள் குறித்து விரிவான அறிக்கை தயாரிக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். பேரிடர் மேலாண்மைச் சட்ட விதிகளின் கீழ் இந்தக் கடன்களைத் தள்ளுபடி செய்யுமாறு மாநில அரசு மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, மத்திய அரசின் பதிலைக் கோரியிருந்தது.
எனினும், மத்திய அரசு இந்த விதியைச் சட்டத்திலிருந்து நீக்கிவிட்டதாக இந்திய சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த நடவடிக்கையை நீதிமன்றம் ‘மனிதாபிமானமற்றது’ என்று குறிப்பிட்டதாக அமைச்சர் கூறினார்.
மேலும் இப்போது, கேரள அரசு, ரூ.18,75,69,037.90 மதிப்புள்ள கடன்களின் பொறுப்பை முழுமையாக ஏற்க முடிவு செய்துள்ளது. மாவட்ட ஆட்சியர் வழங்கிய தரவுகளின் அடிப்படையில், அடையாளம் காணப்பட்ட 555 கடன் வாங்கியவர்களின் முழு கடனையும் அரசே செலுத்தும். இந்தக் கடனுக்கான நிதி முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து பெறப்படும்.” என தெரிவித்தார்.
முன்னதாக, மாநில அரசின் கீழ் இயங்கும் கேரள வங்கி நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் கடன்களை ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.