X

100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வாக்காளர் உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட நரிக்குறவர் சமூகம்!

திருநெல்வேலி மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய முதல்முறை வாக்காளர்கள், மூத்த குடிமக்கள் என அனைத்துத் தரப்பினரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திப் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி மாவட்டத்தின் பேட்டை, அழகியபாண்டியபுரம் மற்றும் வள்ளியூர் பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர் சமூக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டது.

அதன்படி, வள்ளியூரில் நரிக்குறவர் சமூக மாணவ, மாணவியர் பயிலும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளியில் வாக்காளர் கலைத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியம் குறித்து மாணவ, மாணவியர் விழிப்புணர்வுப் பாடல்களுக்கு நடனமாடி கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

ஜனநாயக நாட்டில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை விளக்கிய மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் தலைமையில், விழாவில் கலந்துகொண்ட நரிக்குறவர் சமூக மக்கள் அனைவரும் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் வாக்காளர் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) மா. சுகன்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், துணை ஆட்சியர் (பயிற்சி) கேரேனாப்புக்லிதியா மற்றும் அரசு அலுவலர்கள், நரிக்குறவர் சமூக மக்கள், மாணவ, மாணவியர் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.