தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மத்திய அரசு ஒப்புதலுடன் நீட் தேர்வை ரத்து செய்வதாகவும், மறுதேர்வுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாக்கள் கசிந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மே 1 ஆம் தேதி ராஜஸ்தானின் சிகார் பகுதியில் இந்த வினாத்தாள் சுழற்சிக்கு வந்துள்ளது. இது மாணவர்களிடம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கையால் எழுதப்பட்ட இந்த மாதிரி வினாத்தாள் பிரதியில் மொத்தம் 281 கேள்விகள் இருந்தன. மே 3 ஆம் தேதி நடந்த அசல் நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 135 கேள்விகள் இந்த மாதிரி தாளில் இருந்தவற்றுடன் அப்படியே ஒத்துப்போகின்றன. மொத்தமுள்ள 720 மதிப்பெண்களில், 600 மதிப்பெண்களுக்கான கேள்விகள் தேர்வுக்கு முன்னரே கசிந்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ராஜஸ்தான் காவல்துறை இந்த மாதிரி தாளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இதன் காரணமாக இந்த ஆண்டு நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்களிடம் பெரும் கவலையை எழுப்பியுள்ளது.