ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலில் புகழ்பெற்ற பங்குனித் தேர்த்திருவிழா பாரம்பரியக் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள் கொடியேற்ற மண்டபத்தை அடைந்ததும், அங்கு கோவில் அர்ச்சகர்களால் வேத மந்திரங்கள் முழங்க, சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.
இதைக் காணத் திரளான பக்தர்கள் திரண்ட நிலையில், 11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் நம்பெருமாள் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருவார். விழாவின் முக்கிய நிகழ்வுகளான நம்பெருமாள் – உறையூர் கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை மார்ச் 29 ஆம் தேதியன்றும், நம்பெருமாள் – ரங்கநாயகி தாயார் சேர்த்தி சேவை ஏப்ரல் 1 ஆம் தேதியன்றும் நடைபெற உள்ளது.
சிகர நிகழ்ச்சியான பங்குனித் தேரோட்டம் ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இணை ஆணையர் சிவராம குமார் தலைமையிலான கோவில் நிர்வாகத்தினர் இதற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.