X

திருவாரூர் வரும் கவர்னருக்கு கருப்பு கொடி காட்டுவோம் – பி.ஆர்.பாண்டியன்

அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருவாரூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

காவிரி டெல்டா மாவட்டங்களை மையப்படுத்தி 2 மண்டலங்களில் வேதாந்தா நிறுவனமும், சிதம்பரம் நகரத்தை மையப்படுத்தி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஒரு இடத்திலும், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுத்து வணிக ரீதியில் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் டெல்லியில் நேற்று கையெழுத்தாகியுள்ளது.

இதை கண்டித்தும். இந்த திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

மத்திய அரசின் நேரடி பிரதிநிதியான கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை (3-ந் தேதி) திருவாரூருக்கு வருகிறார்.

டெல்டா மாவட்டங்களில் செயல்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்தும், இந்த திட்டத்தை உடனடியாக கைவிடக்கோரியும், திருவாரூர் மாவட்டம் விளமல் அருகே நாளை மாலை 3 மணியளவில் கவர்னருக்கு விவசாயிகள் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

நெல்லுக்கு குவிண்டாலுக்கு மத்திய அரசு ரூ.200 உயர்த்தி அறிவித்தது ஏமாற்றம் அளித்தது. தமிழக அரசு குவிண்டாலுக்கு ரூ.400 உயர்த்தி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ரூ.70, ரூ.50 என உயர்த்தி சன்ன ரகம் ரூ.1840-ம், சாதாரண ரகம் ரூ.1800-ம் என விலை நிர்ணயம் செய்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. இதை பரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags: south news