தமிழகத்தில் கடந்த மாதம் 4-ந் தேதி சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணி என்கிற எஸ்ஐஆர் பணியினை தேர்தல் கமிஷன் தொடங்கியது. இந்த பணி, கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தேதியன்று இருந்த வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.
அந்த பட்டியலின்படி தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர். இந்த வாக்காளர்களின் வீடுகளுக்கு சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் நேரில் சென்று வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி அதனை பூர்த்தி செய்து பெற்று வந்தனர்.
இந்த படிவங்களில், சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் கடந்த 2002 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் இடம்பெற்று இருந்த சட்டசபை தொகுதிகளின் விவரங்கள் கேட்கப்பட்டு இருந்தன. இந்த விவரங்கள் இல்லாதவர்கள், தங்களது பெற்றோரின் விவரங்களையும், அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணையும் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இந்த அடிப்படையில், கடந்த 14-ந் தேதி வரை வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்து கொடுப்பதற்கு காலஅவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.
இந்த படிவத்தை, பூர்த்தி செய்து கொடுக்காவிட்டால், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்ததால் அனைவரும் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தனர். இந்த படிவத்தை பெற்று கொண்ட வாக்குச்சாவடி அலுவலர்கள், தேர்தல் ஆணையத்தின் செயலியில் அதனை பதிவேற்றம் செய்தனர்.
படிவம் கொடுத்த வாக்காளர்கள் விவரம் மட்டுமின்றி, அந்த தொகுதியில் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் போன்ற விவரங்களையும் பதிவு செய்தனர். மேலும் இரட்டை பதிவு பெயர்களும் நீக்கப்பட்டன. இதன் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த வரைவு வாக்காளர் பட்டியல் 19-ந் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி, அந்தந்த மாவட்டங்களில் கலெக்டர்கள் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். தமிழகத்திற்கான மொத்த வரைவு வாக்காளர் பட்டியலை சென்னை தலைமை செயலகத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கடந்த 19-ந்தேதி வெளியிட்டார். இந்த வரைவு பட்டியலில் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 756 வாக்காளர்கள் இடம் பெற்று உள்ளனர். அதாவது, கடந்த அக்டோபர் மாத வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிட்டு பார்த்தால் சுமார் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பேர் நீக்கப்பட்டு உள்ளனர். இது 15.18 சதவீதம் ஆகும்.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறுகையில்,
வரைவு வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 756 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் ஆண்கள் 2 கோடியே 66 லட்சத்து 63 ஆயிரத்து 233 பேர் ஆவர். பெண் வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சத்து 6 ஆயிரத்து 332 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 7 ஆயிரத்து 191 பேரும் இடம்பெற்றுள்ளனர். இந்த வரைவு பட்டியலில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மட்டும் 4 லட்சத்து 19 ஆயிரத்து 355 பேரும் இருக்கிறார்கள்.
இந்த சிறப்பு தீவிர திருத்தப்பணி மூலம் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றவர்கள் என மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பேர் நீக்கப்பட்டு உள்ளனர். அதில் இறந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 94 ஆயிரத்து 672 பேர் ஆகும். இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் முகவரியில் வசிக்காதவர்கள் எண்ணிக்கை 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 ஆகும். வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 278 ஆகும். தமிழகத்தில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூரிலும், அதற்கு அடுத்ததாக பல்லாவரம் தொகுதியிலும் அதிகம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த வரைவு வாக்காளர் பட்டியல், https://www.elections.tn.gov.in / Electoral-Services.aspx மற்றும் அரசின் மாவட்ட இணையதளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில், வாக்காளர்கள் தங்களது பெயர் இருக்கிறதா? என சரிபார்த்து கொள்ளலாம்.
அதுமட்டுன்றி இறப்பு, இடமாற்றம் மற்றும் இரட்டை பதிவு உள்ள வாக்காளர்களின் விவரங்களையும் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். வரைவு பட்டியலில் பெயர் இல்லாத வாக்காளர்கள் மற்றும் 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்கள், பட்டியலில் புதிதாக சேர படிவம்-6 கொடுக்க வேண்டும். அதனை ஆன்லைன் அல்லது வாக்குச்சாவடி அலுவலர்கள் அல்லது வாக்குசாவடி மையங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் கொடுக்கலாம். இதற்கு அடுத்த மாதம் 18-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
இந்த வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தற்போதைய நிலையில் தமிழகத்தில் மொத்தம் 5.43 கோடி வாக்காளர்கள் தான் உள்ளனர். கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தமிழகத்தில் 5.50 கோடி வாக்காளர்கள் இருந்தனர். அதன்படி பார்த்தால், வாக்காளர் எண்ணிக்கையில் தமிழகம் இப்போது 14 ஆண்டுகள் பின்னோக்கி சென்று இருக்கிறது.
வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள் தங்களது பெயரை சேர்க்க, திருத்தங்கள் மேற்கொள்ள தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் (27, 28) வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்நது. இதையடுத்து ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
இதற்கிடையில் வாக்காளர் படிவத்தை சரியாக பூர்த்தி செய்து கொடுக்காத சுமார் 10 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் வழங்கும் பணியினையும் தொடங்கி இருக்கிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் வழிகாட்டுதல்களின்படி, விவரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டிய வாக்காளர்களுக்கு வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மூலம் அறிவிப்புகள் வழங்கப்படும். இந்திய தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ள 13 ஆவணங்களில் தங்களுக்கு பொருந்தக் கூடிய ஆவணத்தை வாக்காளர்கள் விசாரணையின்போது சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் முறையாக சரிபார்க்கப்பட்ட பின், தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் முடிவு செய்வார்கள்.
இதற்கிடையில் புதிய வாக்காளர்கள் சேர்க்கை, முகவரி மாற்றம் தொடர்பான மனுக்கள் மற்றும் வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை சரியாக பூர்த்தி செய்து வழங்காதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தும் பணிகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரிகளாக 1,255 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களை சட்டசபை தொகுதி வாரியாக தேர்தல் கமிஷன் நியமனம் செய்துள்ளது. இவர்கள் அந்த பணியினை முழு வீச்சில் இறங்கி செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இறுதி வாக்காளர் பட்டியலானது பிப்ரவரி மாதம் 17-ந் தேதி வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.